Ad Widget

வடக்கு விவசாய அமைச்சின் ஏற்பாட்டில், பார்த்தீனியம் ஒழிப்புப் படையணி!

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் பார்த்தீனியம் ஒழிப்புப் படையணியொன்று உருவாக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்த்த 400 இளைஞர்களையும் யுவதிகளையும் கொண்ட இந்தப் படையணியின் முதலாவது செயலமர்வுக் கூட்டம் நேற்று முன்தினம் சனிக்கிழமை (01.03.2014) புத்தூர் சோமஸ்கந்தக் கல்லூரியில் வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்றது.

par2

இந்தியப் படையினர் இலங்கைக்கு வந்தபோது உணவுக்காக அவர்கள் எடுத்து வந்த செம்மறி ஆடுகளுடனும் தானியங்களுடனும் சேர்ந்து வடக்கில் ஊடுருவிய பார்த்தீனியம் இன்று ஓர் ஆக்கிரமிப்புக் களையாக உருவெடுத்துள்ளது. இந்த அந்நிய ஊடுருவல் இனம் விவசாய உற்பத்தியை மோசமாகப் பாதிக்கச் செய்வதோடு உள்ளூர்ச் சுதேசிய இனத் தாவரங்களையும் அழித்து வருகிறது. மனிதர்களிலும், கால்நடைகளிலும் ஒவ்வாமை நோய்களையும் ஏற்படுத்துகிறது.

par1

பார்த்தீனியத்தை ஒழிப்பதற்குக் கடந்த காலங்களில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் அதனைக் கட்டுப்படுத்த முடியாத நிலையே நீடிக்கிறது. இந்நிலையில அண்மையில் உருவாக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண சபையின் விவசாய மற்றும் சுற்றாடல் அமைச்சு பார்த்தீனியம் அழிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. கடந்த 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தைப் பார்த்தீனியம் ஒழிப்பு மாதமாகப் பிரகடனப்படுத்திய வடமாகாண விவசாய அமைச்சு, இப்போது அதன் தொடர்ச்சியாகப் பார்த்தீனியம் ஒழிப்புப் படையணியை உருவாக்கியுள்ளது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் பொ.ஐங்கரநேசன்,

Ankaranesan

பொதுமக்களின் பங்கேற்பில்லாது எந்தத் திட்டமும் வெற்றியடையாது என்பதாலேயே சமூக நோக்குடைய இளைஞர்களையும் யுவதிகளையும் பார்த்தீனியம் ஒழிப்பில் ஒருங்கிணைத்துள்ளோம். வினைத்திறன் கொண்ட இந்த இளைஞர்களும் யுவதிகளும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய கிராமங்களில் இருந்தே தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் நாளொன்றுக்கு ஐந்து மணி நேரம் என்ற அடிப்படையில் பதினைந்து நாட்களுக்குப் பார்த்தீனியம் பல்கிப் பெருகியுள்ள இடங்களில் பார்த்தீனியம் ஒழிப்பில் ஈடுபடவுள்ளார்கள். பொது நோக்கம் கருதித் தங்களது உடல் உழைப்பை நல்க முன்வந்துள்ள இவர்களுக்கு வேலைக்கு உணவுத் திட்டத்தின் கீழ் ஒருமாத கால உலர் உணவை வழங்குவதற்கு உலக உணவுத் திட்டம் முன்வந்துள்ளது. பார்த்தீனியம் ஒழிப்பில் இவர்கள் ஆற்றுகின்ற பங்களிப்புக்கு எத்தகைய கொடுப்பனவுகளும் ஈடாகாது. இவர்களின் சேவையை எல்லோரும் நன்றியுடன் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டார்.

par5

இந்நிகழ்ச்சியில் வடமாகாண சபை உறுப்பினர்கள் த.சித்தார்த்தன், பா.கஜதீபன், அ.பரஞ்சோதி, வடமாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார், யாழ் மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் கி.சிறீபாதசுந்தரம், வலி கிழக்குப் பிரதேச சபைச் செயலாளர் நா.குமணன் ஆகியோரும் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.

Related Posts