Ad Widget

வடக்கு முதல்வர் ஜனாதிபதியிடம் கோரிக்கை

வட மாகாண முதலமைசரால் ​நேற்று ஜனாதிபதிக்கு பின்வரும் விடயங்கள் தெரியப்படுத்தப்பட்டன.

வட மாகாணத்திலுள்ள எல்லா மாவட்டங்களிலும் உள்ள பிரதிநிதிகளும் திருகோணமலை மாவட்ட பிரதிநிதிகளும் சென்ற வாரம் தங்களுடைய அன்புக்குரியவர்கள் காணமற் போனமை பற்றி என்னைச் சந்தித்துப் பேசினார்கள். அதே போல தங்களுடைய காணிகளை விடுவிப்பது பற்றி இடம்பெயர்ந்து வாழ்வோர் என்னுடன் தொடர்புகொண்டார்கள். மேலும் வேலையற்ற பட்டதாரிகளும் சந்தித்துப் பேசினார்கள். அவர்களின் வாழ்வில் ஒளியேற்றுவீர்கள் என்ற நம்பிக்கையில் இவற்றை முன்வைக்கின்றேன்.

காணமற் போனவர்களின் தொடர்ச்சியான போராட்டம் கிளிநொச்சியில் 49 நாட்களும், வவுனியா 38 நாட்களும் முல்லைத்தீவு 26 நாட்களும் வடமராட்சி 19 நாட்களும் திருகோணமலை 29 நாட்களாகவும் நடைபெற்று வருகின்றது.

இவர்களில் பலரும் அறுபது வயதிற்கு மேற்பட்டவர்கள். அவர்கள் நோயாளிகள். வெய்யிலிலும் குளிரிலும் இரவு பகலாக தற்காலிகக் கொட்டகைகளில் இருந்தவாறு போராடுகின்றார்கள். அவர்கள் தங்களுடைய உறவுகள் உயிருடன் இருக்கின்றார்களா அல்லது இறந்து விட்டார்களா என அறிய விரும்புகின்றார்கள். பிரதம மந்திரி உட்பட பலரும் மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவிக்கின்றார்கள். இறந்திருக்கக் கூடும் என பிரதம மந்திரி தெரிவிக்கின்றார். ஆனால் அவர்கள் கைது செய்யப்பட்டு பல வருடங்களின் பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஆதாரமாகக் காட்டி அவர்கள் இன்னமும் உயிருடன் இருக்கின்றார்கள் என கூறுகின்றார்.

உதாரணமாக தேர்தல் காலத்தில் எடுத்த படம் ஒன்றில் தங்களுக்கு முன்னால் இடது பக்கத்தில் தனது மகள் இருப்பதாக ஒரு தாய் காட்டுகின்றார். அவருடைய பெயர் செல்வி.ஜெயவதனா. இன்னும் இருவர் அடையாளம் காட்டப்பட்டனர். இவர்களைக் கண்டு பிடிப்பது தங்களுக்குக் கஷ்டமாக இருக்காது. இதுபோல பல சான்றுகள் கைவசம் வைத்திருக்கின்றார்கள்.

எனவே குறைந்தளவிற்கு இவர்களுக்காக பின்வருவனவற்றையாது தங்களால் செய்ய முடியும் என எதிர்பார்கின்றேன்.

1. காணமற் போனோர் தொடர்பான ´பரணகம´ அறிக்கையை இதுவரை வெளியிடாவிட்டால் வெளியிடல்.
2. காணமற் போனவர்களில் பத்திரிகைகளில் இணங்காட்டப்பட்டவர்களை கண்டு பிடிப்பதற்கான விசாரணைக்கு உத்தரவிடல்.
3. நீதிமன்றத்திற்கு முன் நிறுத்தாது இதுவரை தடுத்து வைக்கப்பட்வர்களின் விபரத்தை வெளியிடல்.
4. தமது அன்புக்குரியவர்கள் அடையாளங் காணப்பட்டால் அவர்கள் அதன்பின்பு காணமற் செய்யப்படக்கூடும் என்ற பயம் உறவினர்களிடம் உண்டு. அதனைத் தாங்கள் கண்காணிப்பீர்கள் என நம்புகின்றேன்.
5. காணமற் போனவர்களுக்கான அலுவலகத்தை உடன் இயங்கச் செய்தல்.
6. காணமற் போனோர் என உறுதிப்படுத்தப்பட்ட பின்பு பொருத்தமான சான்றிதழ்களை வழங்கல்.

காணிகள் யுத்தத்தின் பின் எட்டு வருடங்களாகியும் விடுவிக்கப்படவில்லை. இராணுவத்தினருடைய பிரசன்னம் இனியும் தேவையற்றபடியால் அவர்கள் வசமுள்ள காணிகளை விடுவிக்கலாம். புலனாய்வு வேலைகளை பொலிசார் மேற்கொள்ள முடியும். மிகுதியாக மயிலிட்டியிலுள்ள யுத்த தளபாடங்களை முன்னர் ஒரு முறை செய்தது போல் அழிக்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

இவை தொடர்பாக பின்வரும் ஆலோசனைகளைத் தெரிவிக்க விரும்புகின்றேன்.

01. இராணுவதினர் வசமுள்ள காணிகளின் விபரங்களை வெளியிடல்.
02. மக்கள் செறிந்து வாழும் இடங்களிலிருந்து இராணுவத்தினரை வெளியேற்றல். சிங்கள மக்களின் இடங்களில் அவர்களை வைத்திருப்பின் அவர்கள் எதிர்க்க மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் அவர்களின் உறவினர்கள். ஆனால் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் பல்வேறு பிரச்சனைகள் உருவாகின்றன.
03. கூகிள் வரைபடங்கள் மூலம் காட்டுப் பகுதிகளில் பல்வேறு நடவடிக்கைகள் நடாத்தப்படுவதாக அறிய வருகின்றது. பெறுமதி மிக்க மரங்கள் கடத்தப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்டுள்ளன. எங்களுடைய வளங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன.
04. பெண்களைத் தலைமையாகக் கொண்ட குடும்பங்கள் இராணுவ முகாம்கள் அருகில் இருப்பதால் பல பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றன.

வேலையற்ற பட்டதாரிகள் ஒருமாதத்திற்கும் மேலாக தொடர்ந்து கவனயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். அவர்களுக்கு உரிய வேலைவாய்பினை வழங்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பாக பின்வரும் ஆலோசனைகளைத் தெரிவிக்க விரும்புகின்றேன்.

01. வடக்கு கிழக்கிலுள்ள மத்திய அரசாங்க மாகாண அரசாங்க வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கைகள் எடுத்தல்.
02. பொலிசாரின் ASP தரத்தில் நியமனங்களை விரும்புகின்ற பட்டதாரிகளுக்கு அப்பதவிகளை வழங்க உதவுதல்.
03. இதே போன்று வேறு அரச நிறுவனங்களிலும் வேலைகள் வழங்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
04. தனியார் துறையில் பொருத்தமான வேலைகளை வழங்கல்.
05. சுற்றுலாத் துறையில் இவர்களுக்கு வேலைகளை வழங்க நடவடிக்கை எடுத்தல்.

இவை யாவற்றையும் தங்கள் கவனிப்பிற்கு கொண்டு வரும் அதே நேரம் விரைவில் அவர்கள் சார்பாக நன்நடவடிக்கைகளை எடுக்க முன்வருவீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.

Related Posts