Ad Widget

வடக்கு முதல்வருடன் ஜப்பானியத் தூதர் சந்திப்பு

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் நொபுஹிட்டோ ஹோபு வடமாகண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்புக் குறித்து முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்ததாவது:-

இந்தச் சந்திப்பின் போது வடமாகாண சபையின் நடவடிக்கைகள் அது எதிர்நோக்கும் பிரச்சினைகள் அதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடினோம் வடபகுதியில் இராணுவக் குறைப்பு தொடர்பாக அவர் என்னிடம் கேட்டார்.

இராணுவக் குறைப்பு என்று கூறிக் கொண்டு பொதுமக்களின் காணிகள் இராணுவ முகாம்கள் அமைப்பதற்காகவே அபகரிக்கப்படுகின்றன. ஓரிடத்தில் இருந்து இராணுவத்தினரை அகற்றி இன்னோர் இடத்தில் அவர்களுக்கு முகாம் அமைப்பதற்காகவே காணிகள் அபகரிக்கப்படுகின்றன என்பதை ஜப்பான் தூதுவருக்கு விளக்கின் கூறினேன்.

மீன்பிடி, விவசாயம் போன்ற தொழில்களைச் செய்வதற்கு இராணுவத்தினர் இடையூறாக இருக்கின்றனர் என்பதையும் அவருக்கு எடுத்துக் கூறினேன். சுன்னாகம் பகுதியில் உள்ள கிணறுகளில் கழிவு ஒயில் கலப்பது குறித்தும் ஜப்பானிய அரசின் தொழில்நுட்பத்துடன் அதை எவ்வாறு தடுக்கலாம் என்பது குறித்தும் தூதுவருடன் கலந்துரையாடினேன் – என்று முதலமைச்சர் தெரிவித்தார்.

Related Posts