Ad Widget

வடக்கு முதலமைச்சருக்கு உயர்நீதிமன்றம் நேற்றுத் தடை உத்தரவு

Supreme-Court-buildingவடக்கு மாகாண முதலமைச்சரினால், மாகாண நிர்வாக நடைமுறைகள் தொடர்பாக விடுக்கப்பட்ட சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு கொழும்பு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை நேற்றுப் பிறப்பித்துள்ளது.

வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி ஆர்.விஜயலட்சுமியால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பிலான வழக்கு நேற்றையதினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே மேற்படி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சரினால், வடக்கு மாகாண நிர்வாக நடைமுறைகள் தொடர்பான சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. குறித்த சுற்றறிக்கையின் பிரகாரம் தனது உரித்துக்கள் பறிக்கப்படுவதாக பிரதம செயலாளர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் வடக்கு மாகாண சபையினால் தொடர்ச்சியாக பிரதம செயலாளர் மீது குற்றஞ் சுமத்தப்பட்டு வருகின்றது. தொடர்ச்சியான தொந்தரவுகள் தொடர்பிலும், பிரதம செயலாளர் தனது கடமைகளைச் சரிவரச் செய்தே இருக்கின்றார் என்பதை நிரூபிப்பதற்காகவுமே குறித்த வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் பிரதம செயலாளர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்திருந்த முதலமைச்சர் விக்னேஸ்வரன், வழக்கு தொடரப்பட்டுள்ளமை நல்லது தான் என்றும் அதனூடாக மாகாணசபையின் அதிகாரங்கள் தொடர்பில் நீதிமன்றமே தீர்ப்பளிக்கட்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

குறித்த வழக்கில் பிரதிவாதிகளாக வடக்கு மாகாண முதலமைச்சர், ஜனாதிபதியின் செயலாளர், வடக்கு மாகாண ஆளுநர், பொதுச்சேவை ஆணைக்குழுவின் தலைவர், பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஆகியோர் பிரதம செய லாளரால் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் கொழும்பு உயர்நீதிமன்றத்தில் குறித்த வழக்கு விசாரணைக்காக நேற்றையதினம் எடுத்துக் கொள்ளப்பட்டது.

பிரதிவாதிகள் தரப்பில் எவரும் மன்றில் முன்னிலையாகவில்லை. அதனால் எதிர்வரும் ஜுலை 14 ஆம் திகதிக்கு வழக்கை ஒத்தி வைத்த நீதி மன்றம், அதுவரையில் முதலமைச்சரினால் வெளியிடப்பட்ட மாகாண நிர்வாக நடவடிக்கை தொடர்பான சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கும் இடைக்கால தடை விதித்தது.

Related Posts