Ad Widget

வடக்கு மாகாண புதிய அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்

வடக்கு மாகாணத்தின் புதிய அமைச்சர்களாக கலாநிதி கந்தையா சர்வேஸ்வரனும், அனந்தி சசிதரனும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில், ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில், இவர்கள் இருவரும் இன்று (வியாழக்கிழமை) காலை மாகாண அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

விவசாய அமைச்சை முதலமைச்சர் விக்னேஸ்வரன் பொறுப்பேற்றுள்ள நிலையில், இதுவரை காலமும் விவசாய அமைச்சின் பிரிவுகளாக காணப்பட்ட மகளிர் விவகார கூட்டுறவு புனர்வாழ்வு அமைச்சை அனந்தி சசிதரன் பொறுப்பேற்றுள்ளார்.

அத்தோடு, கல்வி பண்பாட்டு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக கந்தையா சர்வேஸ்வரன் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட இரு அமைச்சர்கள் பதவி விலகியுள்ள நிலையில், குறித்த அமைச்சுக்களை நிர்வகிப்பதற்காக மூன்று மாத காலத்திற்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரான சுரேஸ் பிரேமச்சந்திரனின் சகோதரரான கலாநிதி சர்வேஸ்வரன், கொழும்பு பல்கலைக்கழகத்தின் வருகை நேர விரிவுரையாளராக கடமையாற்றியுள்ளார்.

கடந்த 2013ஆம் ஆண்டு மாகாண சபை தேர்தலில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினால் பரிந்துரைக்கப்பட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்ற சர்வேஸ்வரன், முதலமைச்சரின் ஆலோசகராகவும் செயற்பட்டார்.

இதேவேளை, விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளரான எழிலன் எனப்படும் சசிதரனின் மனைவியான அனந்தி, காங்கேசன்முறை நடேஸ்வரா கல்லூரி மற்றும் சுழிபுரம் விக்டோரியா கல்லூரி ஆகியவற்றில் தமது பாடசாலை கல்வியை பூர்த்திசெய்ததோடு, யாழ். தொழிநுட்ப கல்லூரியில் கணக்கியல் உயர் தேசிய டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்திசெய்தார்.

அதன் பின்னர், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றிய அனந்தி, கடந்த 2013ஆம் ஆண்டு மாகாண சபை தேரர்தலில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு மாகாண சபைக்கு தெரிவானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts