Ad Widget

வடக்கு மாகாண பனை எழுச்சி வாரக் கண்காட்சி யாழ். நல்லூர் சங்கிலியன் பூங்காவில் ஆரம்பமானது

“பனை மான்மியம்” எனும் தலைப்பிலான வடக்கு மாகாண பனை எழுச்சி வாரக் கண்காட்சி நேற்றுத் திங்கட்கிழமை(22) முற்பகல்-09.30 மணியளவில் யாழ். நல்லூர் சங்கிலியன் பூங்காவில் ஆரம்பமானது.  “பனை எங்கள் சூழல், பனை எங்கள் பண்பாடு, பனை எங்கள் பொருளாதாரம்” எனும் தொனிப் பொருளில் இம்முறை பனை எழுச்சிவாரம் இடம்பெறுகிறது.

வடமாகாணக் கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்கள ஆணையாளர் பொ. வாகீசன் தலைமையில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் வடமாகாணக் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் இரா. வரதீஸ்வரன் பிரதமவிருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சிக் கூடத்தைச் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து விருந்தினர்கள், நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பனை-தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் பனை அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள், பல்துறைசார்ந்தவர்கள், ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கண்காட்சிக் கூடங்களைப் பார்வையிட்டனர்.

குறித்த கண்காட்சியில் பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்கள், கொத்தணிகள், பனைசார் உற்பத்திக் குழுக்களின் பல்வேறு காட்சிக்கூடங்கள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் பனை அபிவிருத்திச் சபைக்கெனவும் தனியானதொரு காட்சிக் கூடம் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியில் பல்வேறு பனைசார் உற்பத்திப் பொருட்கள், பனைசார் உணவுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் எனப் பெருமளவான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கண்காட்சிக் கூடங்கள் ஒவ்வொன்றும் பனம் பொருட்களைப் பயன்படுத்தி இயற்கை முறையில் அமைக்கப்பட்டிருப்பது கண்காட்சிக்கு மேலும் அழகு சேர்ப்பதாக அமைந்துள்ளது.

தொடர்ந்து வடமாகாணக் கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்கள ஆணையாளர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வடக்கு மாகாணக் கல்வி தொடர்பான மனித உரிமை இணைப்பாளர் அருட்தந்தை கலாநிதி ஜோன் போல், யாழ்.மாநகர சபையின் முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட், பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் ஆ. ந. இராசேந்திரம், பனை அபிவிருத்திச் சபையின் பொதுமுகாமையாளர் எம். வி. லோகநாதன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

தொடர்ந்து கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தினால் “பனை மான்மியம்” எனும் தலைப்பிலான விசேட இறுவெட்டு வெளியீடு செய்து வைக்கப்பட்டது. குறித்த இறுவெட்டினை மகளிர் விவகார அமைச்சின் கணக்காளர் எஸ். விஸ்வகுமார் வெளியீடு செய்து வைக்க யாழ். மாவட்டப் பனை- தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் இறுவெட்டின் முதற்பிரதியைப் பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து குறித்த இறுவெட்டிலுள்ள பாடல் ஒலிபரப்பப்பட்டது.

அதனைத் தொடர்ந்து “தாலம்” ஆண்டு சஞ்சிகை சம்பிராதயபூர்வமாக வெளியீடு செய்து வைக்கப்பட்டது. கல்வியியலாளர் இ. சர்வேஸ்வரா சஞ்சிகையின் விமர்சன உரையை நிகழ்த்தினார்.

பனை எழுச்சிவார கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் மத்திய வங்கியின் வடபிராந்திய முகாமையாளர், பனைஆராய்ச்சி நிறுவனத்தின் ஓய்வுநிலை ஆய்வுகூட உதவியாளரும், செயற்பாட்டாளருமான தி.பன்னீர்ச்செல்வம், மாவட்டக் கூட்டுறவு ஆணையாளர்கள், பனை- தென்னவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் தலைவர், பொதுமுகாமையாளர்கள், கொத்தணிகளின் தலைவர்கள், பொதுமுகாமையாளர்கள், கூட்டுறவாளர்கள், ஆர்வலர்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

இதேவேளை,நேற்றைய தினம் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் ஆரம்பமாகியுள்ள மேற்படி கண்காட்சி எதிர்வரும்- 28 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக ஒருவாரம் இடம்பெறவுள்ளது. காலை-09 மணி முதல் இரவு-09.30 மணி வரை ஆர்வமுள்ளவர்கள் குறித்த கண்காட்சியைப் பார்வையிட முடியும். அத்துடன் பனைசார் உற்பத்திப் பொருட்களைத் தெரிவு செய்து கொள்வனவு செய்ய முடியுமெனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பனை எழுச்சி வார கண்காட்சி இம்முறை ஐந்தாவது முறையாக யாழ். நல்லூரில் ஏற்பாடு செய்து நடாத்தப்படுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related Posts