Ad Widget

வடக்கு பயணத் தடை அடிப்படை உரிமை மீறல்

இலங்கையில் பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதியைப் பெறாமல் வடக்குப் பிராந்தியத்துக்கு வெளிநாட்டுப் பிரஜைகள் செல்வதில் உள்ள தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்ய முடியும் என்று லாயர்ஸ் கலெக்டிவ் என்ற சட்டத்தரணிகளின் கூட்டமைப்பு கூறியுள்ளது.

omanthai-check-post

வட பிராந்தியத்துக்கு செல்லுகின்ற வெளிநாட்டுப் பிரஜைகள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெற்றிருக்க வேண்டும் என்று அரசாங்கம் அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவு, அரசியலமைப்புக்கு முரணானது என்று சட்டத்தரணிகளின் செயற்பாட்டு அமைப்பு கூறியிருக்கின்றது.

‘அரசியலமைப்பின், 14 (1) பிரிவின்படி, உள்நாட்டுக்குள் பிரஜைகளுக்கு உள்ள நடமாடும் சுதந்திரத்தை உத்தரவாதப்படுத்துகின்றது, அதேபோல, 12 (1)- பிரிவு எந்தவொரு தனிநபரும் அவர் இலங்கையின் பிரஜையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், அவர்கள் மீது அரசு எதேச்சாதிகாரமான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதை தடைசெய்கின்றது’ என்று லாயர்ஸ் கலெக்டிவ் அமைப்பு அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேபோல, நாடாளுமன்ற சட்டத்தையோ அல்லது அவசரகால சட்டத்தையோ அடிப்படையாகக் கொண்டே நாட்டில் பயணத் தடைகளை அரசாங்கம் அறிவிக்க முடியும் என்று நீதிமன்றத் தீர்ப்புகள் ஏற்கனவே தெளிவாகக் கூறியிருப்பதாகவும் அந்த அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றி, வடக்குக்கு வெளிநாட்டவர்கள் செல்வதைத் தடைசெய்வதற்கு எந்தவொரு சட்டமும் கடைப்பிடிக்கப்பட வில்லை என்றும் சட்டவல்லுநர்கள் கூறியுள்ளனர்.

சட்டவிதிகள் இல்லாத இடத்தில், நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்ட எந்தவொரு அரச நிறுவனத்துக்கும் அதிகாரம் இல்லை என்றும் லாயர்ஸ் கலெக்டிவ் கூறியுள்ளது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வெளிநாடுகளுக்குச் சென்ற இலங்கையர்கள் தங்களின் குடும்ப உறவினர்களை சந்திப்பதற்கான உரிமையை அரசாங்கம் மறுக்க முடியாது என்று லாயர்ஸ் கலெக்டிவ் அமைப்பின் ஏற்பாட்டாளர் லால் விஜேநாயக்க கூறினார்.

‘இங்கிருந்து யுத்தம் காரணமாக வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள், அங்கு அகதிகளாக இருந்தபடியால் குடியுரிமையை பெற்றிருக்கிறார்கள். அவர்களுக்கு இப்படியான தடைகளை விதிப்பது சட்டத்துக்கு முரணானது. அதேபோலத்தான், அவர்களின் இலங்கைப் பிரஜைகளான தாய் தந்தையரின் அடிப்படை உரிமைகளும் இதன்மூலம் மீறப்படுகின்றன’ என்றார் லால் விஜேநாயக்க.

‘இந்த நடவடிக்கையினால் பாதிக்கப்படுவர்கள் எவராவது எங்களின் உதவியைக் கோரினால், நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அவர்களுக்கு உதவத் தயாராக இருக்கின்றோம்’ என்றும் கூறினார் வழக்குரைஞர் லால் விஜேநாயக்க.
இலங்கையில் சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறை சுதத்திரத்துக்காக லாயர்ஸ் கலெக்டிவ் அமைப்பு குரல் கொடுத்துவருகின்றது.

Related Posts