Ad Widget

வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் அக்கறை இல்லை: ரவூப் ஹக்கீம்

வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பிலோ பிரிப்பு தொடர்பிலோ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எந்தவிதத்திலும் அலட்டிக்கொள்ளாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு,காத்தான்குடி கடற்கரை வீதியில் உள்ள விடுதியொன்றில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“வடக்கு – கிழக்கு இணைக்கப்பட வேண்டுமானால் தனி முஸ்லிம் மாகாணம் உருவாக்கப்படவேண்டும் என்ற கொள்கையில் இருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் மாறாது.

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் பல உள்ளூராட்சி மன்றங்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றும்.சில உள்ளூராட்சி மன்றங்களின் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விளங்கும்.

இதற்கான செயற்பாடுகளை நாங்கள் மேற்கொண்டுவருகின்றோம். இம்முறை கோறளைப்பற்று மத்தி உள்ளூராட்சி மன்றத்தினை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றும்.

கட்சிக்குள் முரண்பாடுகள் இருக்கலாம்.அவற்றினையெல்லாம் ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு கட்சியினை வெற்றிப்பாதைக்கு கொண்டுசெல்லவேண்டிய பாரிய பொறுப்பு கட்சிப் போராளிகளுக்கு உள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினை பலப்படுத்துவதன் மூலமே நான்கில் ஒரு பங்காக காணப்படும் முஸ்லிம்களின் பாதுகாப்பும் சுபீட்சமும் இருக்கின்றது என்பதை புரியவைக்கும் தேர்தலாக வரும் தேர்தலை நாங்கள் மாற்றவேண்டும்” என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

Related Posts