Ad Widget

வடக்கில் 5 இலட்சம் மரக்கன்றுகளை கார்த்திகையில் நடுவதற்குத் திட்டம்

வடமாகாண மரநடுகை மாதமான கார்த்திகை மாதம் முதலாம் திகதி தொடங்கி முப்பதாம் திகதி வரையான காலப்பகுதியில் வடக்கில் ஐந்து இலட்சம் மரக்கன்றுகளை நடுவதற்குத் திட்டம் இடப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அறிவித்துள்ளார்.

வடமாகாண மரநடுகை மாதம் தொடர்பாக அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அவரது அலுவலகத்தில் இன்று  ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தியிருந்தார். அதன்போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

வடக்கில் மரநடுகையைப் பெருமளவில் மேற்கொள்வதற்கு மிகப்பொருத்தமான மாதமாகக் கார்த்திகை மாதமே உள்ளது. கார் என்பது மழையைக் குறிக்கும். அந்தவகையில், மழையின் பெயரைத் தன் பெயரில் கொண்டிருக்கும் கார்த்திகை மாதத்திலேயே வடக்கில் கூடுதலான மழைவீழ்ச்சி கிடைக்கிறது.

தமிழர்களின் வாழ்வியலில் கார்த்திகை ஒரு புனிதமான மாதமாகக் கருதப்படுகிறது. வீடுகள்தோறும் விளக்கேற்றி வழிபடும் திருநாள் இம்மாதத்திலேயே அடங்குகிறது.

மழைத்தண்ணீரால்நனையும் மாதமாக மாத்திரம் அல்லாமல் தமிழ்மக்களின் கண்ணீரால் நனையும் மாதமாகவும் கார்த்திகை உள்ளது. போரில் உயிர் துறந்த மாவீரர்களின் கூட்டு நினைவாகத் தமிழ் மக்கள் கண்ணீர் உகுக்கும் நாட்களும் இம்மாதத்தினுள்ளேயே அடங்குகின்றன.

மரங்களை வணங்குகின்ற தொன்மையான வழிபாட்டைக்கொண்ட நாங்கள், மரணித்தவர்களின் நினைவாக மரங்களை நாட்டி வைக்கும் மாண்பையும் கொண்டிருக்கிறோம். இவற்றின் அடிப்படையிலேயே கார்த்திகை மாதத்தை வடமாகாண மரநடுகை மாதமாகப் பிரகடனம் செய்து,‘ஆளுக்கொரு மரம் நடுவோம், நாளுக்கொரு  வரம் பெறுவோம்’ என்ற மகுட வாசகத்துடன் கடந்த ஆண்டில் இருந்து கடைப்பிடித்து வருகிறோம்.

இந்த ஆண்டு மரநடுகை மாதத்தில் 5 இலட்சம் மரக்கன்றுகளை நடவேண்டும் என்று கௌரவ முதலமைச்சர் அவர்கள்; தெரிவித்திருந்தார். அவரது கோரிக்கைக்கு அமைவாக ‘ஐந்து மாவட்டங்கள், ஐந்து இலட்சம் மரக்கன்றுகள்’ என்பதை இந்த ஆண்டின் கருப்பொருளாகக் கொண்டு 5 இலட்சம் மரங்களை நடுவதற்குத் தீர்மானித்துள்ளோம். நிழல் மரங்கள், வர்த்தகப் பெறுமதியான மரங்கள், பழமரங்கள், பனை விதைகள் போன்றவற்றை ஐந்து மாவட்டங்களிலும் நாட்டுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

பனைமரத் தோப்புகளை உருவாக்கும் நோக்கில் குறித்த இடைவெளிகளில் பனம் விதைகளை ஊன்றவுள்ளோம். வெற்றுக் காணிகளின் உரிமையாளர்கள் அனுமதித்தால் அங்கும் மரங்களை நடுகை செய்துகொடுப்பதற்கும் நாம் தயாராக உள்ளோம்.வடக்கைப் பசுமையாக்கும் இந்தப் புனித காரியத்தில்; பாடசாலைகள், சனசமூக நிலையங்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், கூட்டுறவு அமைப்புகள், மாதர் அமைப்புகள், ஆலயங்கள் ஆகியவற்றையும் எங்களுடன்கைகோர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Posts