Ad Widget

வடக்கில் 248 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கிவைப்பு!

வடக்கு மாகாணத்தில், ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம், விவசாயம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கு ஆசிரியர்களாக 248 பட்டதாரிகள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இன்று திங்கட்கிழமை காலை யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில், வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தலைமயில் இந்த நியமனம் வழங்கப்பட்டது.

ஏற்கனவே இடம்பெற்ற நேர்முகப் பரீட்சைகளின் அடிப்படையில் வட மாகாண கல்வி அமைச்சினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன.

இதன்படி, ஆங்கில பாடத்துக்கு 64 பேருக்கும், கணித பாடத்துக்கு 56 பேருக்கும், விவசாய விஞ்ஞானப் பாடத்துக்கு 35 பேருக்கும், விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் பாடத்துக்கு 69 பேருக்கும், தகவல் தொழில்நுட்பத்துக்கு 24 பேருக்குமாக 248 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வுக்குப் பிரதம விருந்தினராக வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனும், சிறப்பு விருந்தினராக வட மாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை, இளைஞர் விவகார அமைச்சர் த.குருகுலராசாவும் கலந்துகொண்டார்கள்.

இவர்களுடன் வட மாகாண சபையின் அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம், பதில் தலைவர் அன்ரனி ஜெகநாதன், உறுப்பினர்களான பா.கஜதீபன், து.ரவிகரன், இ.ஆர்னோல்ட், மு. பரஞ்சோதி, த.சிவயோகன் மற்றும் கல்வி வலய அதிகாரிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts