Ad Widget

வடக்கில் 21 பேருக்கு கோரோனா- இருவர் யாழ்.பல்கலை மாணவர்கள்; ஐவர் வங்கி ஊழியர்கள்

வடக்கு மாகாணத்தில் மேலும் 21 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் 2 பேர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று 776 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் 21 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கரைச்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஆடைத் தொழிற்சாலை கோரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 8 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட மாணவி ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்.

உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நுண்கலைத் துறை மாணவி ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் பதுளையிலிருந்து வருகை தந்து கல்விபயின்றவர்.

அத்துடன், சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்துப்பட்டுள்ளது. அவர் கொழும்பிலிருந்து வருகை தந்த நிலையில் தானாக முன்வந்து பிசிஆர் மாதிரிகளை வழங்கியவர்.

மன்னார் நானாட்டான் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 8 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் 5 பேர் ஹற்றன் நஷனல் வங்கியின் நானாட்டான் கிளை உத்தியோகத்தர்கள்.

அந்த வங்கிக் கிளை உத்தியோகத்தர்களிடம் பிசிஆர் மாதிரிகள் பெறப்பட்ட நிலையில் கிளை அலுவலகம் நேற்று முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

அத்துடன் நானாட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மூவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்புடையோர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் இரண்டு பேர் மன்னார் நகர் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அவர்கள் இருவரும் கோரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் வைத்தியசாலைக்கு சிகிச்சை சென்ற நிலையில் மாதிரிகள் பெறப்பட்டன” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் கூறினார்.

Related Posts