Ad Widget

வடக்கில் முதலமைச்சர் ஒருவர் இருப்பதற்கு இந்தியாதான் காரணம் – மகாலிங்கம்

mahalingam-indiaவடமாகாணத்தில் ஒரு முதலமைச்சர் இருக்கின்றார். மற்ற அமைச்சர்கள் இருக்கின்றார்கள். வடமாகாணத்தில் உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் உங்கள் பிரமுகர்கள் வடமாகாணத்தை ஆளுமை செய்கின்றார்கள் என்றால் அதற்கு காரணம் இந்தியா தான் என்பதையும் நீங்கள் மறுக்க முடியாது’ என இந்திய துணைத் தூதரகத்தின் கொன்சலட் ஜெனரல் வெங்கடாசலம் மகாலிங்கம் தெரிவித்தார்.

‘தமிழ் மக்களின் ஆதங்கத்தின் அடிப்படையில்தான் இந்தியா 1987 ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படையை இங்கே அனுப்பியது’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கயானா நாட்டுக்கு இடம்மாற்றம் பெற்றுச் செல்லும் யாழ்.இந்திய துணைத் தூதரகத்தின் கொன்சலட் ஜெனரல் வெங்கடாசலம் மகாலிங்கத்திற்கு ரில்கோ விருந்தினர் விடுதியின் ஏற்பாட்டில் பிரிவுபசார நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

‘இந்தியப்படை இங்கே வரும்போது அதற்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைத்தது என்பதையும் இந்திய அமைதிப்படை வந்த மூன்று மாத காலப்பகுதியில் இங்கே என்ன நடந்தது என்பதையும் நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டும் என்றும் இல்லை.

இந்திய அமைதிப்படை என்ன தீர்வு காண வந்தார்களோ அதை நடக்க விடாமல் பண்ணியதற்கு இந்திய அமைதிப்படையோ இந்திய அரசாங்கமோ காரணம் அல்ல என்பதையும் நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

வடமாகாண தேர்தலை நடத்த வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தை இந்திய அரசாங்கமே நிர்ப்பந்தித்தது. இந்தியாவில் சென்றுதான் வடமாகாண தேர்தல் திகதியையும் குறித்தார்கள்.

ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா மூன்றாவது முறையாக புறக்கணிக்க பல காரணங்கள் உண்டு. ஆனால் அவை எல்லாவற்றையும் இங்கு வெளிப்படையாகச் சொல்ல முடியாது.

இருந்தும், வெளிப்படையாக சொல்ல கூடியதை சொல்கிறேன். ஒரு நாட்டுக்கு வெளியில் இருந்து தாக்கம் கொடுப்பது என்பது இந்திய வெளியுறவு கொள்கையில் ஒரு போதும் ஒத்துக்கொள்ள முடியாத விடயம். ஆகவே தான் இந்தியா அவ்வாறான சந்தர்ப்பம் வரக்கூடாது என்று தீர்மானத்தினைப் புறக்கணித்தது.

அவ்வாறு புறக்கணித்ததன் காரணமாகத்தான் இந்தியா, இலங்கை அரசாங்கத்துடன் உட்கார்ந்து பேச முடிகிறது. இந்தியாவும் மற்ற நாடுகளுடன் சேர்ந்து மூன்றாவது திருத்தத்தில் பங்கேற்று இருந்தால் இந்தியா கண்டிப்பாக இலங்கை அரசாங்கத்துடன் பேசி தமிழர்களுக்கு தீர்வு வழங்கக்கூடிய சந்தர்ப்பத்தினை இழந்திருக்கும்.

ஆகவேதான் இந்தியா புறக்கணிக்கும் முடிவை எடுக்க வேண்டி வந்தது என்பதையும் இங்கே கூறிக்கொள்கிறேன்’ என அவர் மேலும் தெரிவித்தார்

இதன்போது ரில்கோ விருந்தினர் விடுதியின் உரிமையாளர் எஸ்.திலகராஜ் இந்திய துணைத் தூதரகத்தின் கொன்சலட் ஜெனரல் வெங்கடாசலம் மகாலிங்கத்திற்கு நினைவு பரிசு ஒன்றினையும் வழங்கினார்.

இந்நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை, பேராசிரியர் சிற்றம்பலம், யாழ்.வர்த்தக சங்க தலைவர் ஆர்.ஜெயசேகரம் மற்றும் இந்திய துணைத் தூதரகத்தின் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts