Ad Widget

வடக்கில் மீண்டும் மரண பயத்தை அரசு ஏற்படுத்துகின்றது!

“வடக்கில் பொதுமக்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் மீண்டும் மரண பயத்தை அரசு ஏற்படுத்தி வருகின்றது. ஜனநாயகத்தை அழித்து மனித உரிமை மீறல்களை மேற்கொள்ளும் இந்த ஆட்சிக்கு எதிராக அச்சமின்றி முகம் கொடுத்து நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவோம்.” – இவ்வாறு சிவில் சமூகக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

nimalka - fanandoo

சிவில் சமூகக் கூட்டமைப்பு கொழும்பு சி.எஸ்.ஆர். நிலையத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

இதில் கருத்துத் தெரிவித்த அனைத்து வகையான மாறுபாடு மற்றும் இனவாதத்திற்கான சர்வதேச மையத்தின் தலைவர் நிமல்கா பெர்னாண்டோ மேலும் குறிப்பிட்டவை வருமாறு:

“வடக்கு, கிழக்கில் உள்ள ஊடகவியலாளர்கள் இன்று தமது ஊடக சுதந்திரத்தை இழந்துவிட்டனர்.

தமது உரிமைகளைக்கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை இன்று வடக்கிலும் கிழக்கிலும் ஏற்பட்டுள்ளது.

மனித உரிமைகளுக்காக மக்கள் போராடும்போது அரசு பாதுகாப்புப் பிரிவினரைப் பயன்படுத்தி அடக்குமுறைகளைக் கையாள்கின்றது. இவ்வாறு அரசு செய்வது அரசு கொடுத்த வாக்கினை மீறும் செயற்பாடாகும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் வடக்கின் ஊடக சுதந்திரத்தைப் பாதுகாத்து ஊடகவியலாளர்களுக்கான சுதந்திரத்தையும் உரிமைகளையும் வழங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், இன்று அவற்றுக்கு முரணான் வகையில் அரசே செயற்பட ஆரம்பித்து விட்டது. நாட்டில் ஜனநாயகம் அழிக்கப்படுகின்றபோதும், மனித உரிமைகளுக்கு எதிராக அரசு செயற்படுகின்ற சந்தர்ப்பத்திலும் நியாயம் கேட்டுப் போராட நாங்கள்தான் உள்ளோம்.

எனவே, எமது வாயையும் மூடுவதற்காகவே இப்படி அரசசார்பற்ற நிறுவனங்களைக் கட்டுப்படுத்த அரசு முயற்சிக்கின்றது.

சிவில் அமைப்புகளுக்கு பொறுப்பு இருக்கின்றது. இந்த நாட்டின் உரிமைகளுக்காக குரல்கொடுக்கவும், நாட்டின் உண்மை நிலைமையினை சர்வதேச அளவில் கொண்டு செல்லவும் எனவும் அனைத்து உரிமைகளும் உண்டு. அதையே நாம் செய்கின்றோம்.

அதேபோல் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டே நாம் செயற்படுகின்றோம். இந்த நாட்டின் யாப்பில் சிவில் சமூகம் செயற்படக்கூடாது எனக் குறிப்பிடப்படவில்லை. எனவே, தொடர்ந்தும் சிவில் சமூகத்தின் உரிமைகளுக்காக நாம் போராடுவோம்” – என்றார்.

காணாமல்போனோர் குடும்பங்களுக்கான அமைப்பின் தலைவர் பிரிட்டோ பெர்னாண்டோவும் இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றினார்.

Related Posts