Ad Widget

வடக்கில் மக்களுக்கு முழுமையான சுதந்திரம் – யாழில் ராஜித

வடக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மக்களுக்கு முன்னெப்பொழுதும் இல்லாதவாறு முழுமையான சுதந்திரம் தற்போதைய அரசால் வழங்கப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன யாழில் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், போதனா வைத்தியசாலையில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வடக்கு மக்களின் முழு ஒத்துழைப்புடேனேயே நாம் ஆட்சியை அமைத்தோம். அந்த அடிப்படையில் வட. பகுதி மக்களின் தேவைகள் தொடர்பில் நாம் தொடர்ந்தும் கவனமாக செயற்பட்டுவருகின்றோம். கடந்த முப்பது ஆண்டுகளில் எப்பொழுதும் இல்லாதவாறு முழுமையான சுதந்திரம் தற்போது வடக்கில் உள்ளது.

கடந்த ஆட்சியில் காணப்பட்ட இறுக்கமான கண்காணிப்புக்கள் எதுவும் தற்போது இல்லை. அத்தோடு தாம் விரும்பியவாறு சகலவற்றையும் செய்துகொள்ளும் வகையில் முழு உரிமையையும் நாம் வடக்குக்கு வழங்கியுள்ளோம்.

தற்போது பல காரணங்களுக்காக வடக்கிலுள்ளவர்கள் போராட்டங்களில் ஈடுபடுகின்றார்கள். முன்னைய ஆட்சி காலங்களில் போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் பொலிஸாராலும் இராணுவத்தினராலும் கண்காணிக்கப்பட்டனர். ஆனால் தற்போது வடக்கில் இடம்பெறும் போராட்டங்களுக்கு பொலிஸார் பாதுகாப்பு வழங்குகின்றனர்.

அதிகாரப் பகிர்வொன்றின் மூலமே பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும் என நாம் நம்புகின்றோம். அதற்கான முயற்சிகளிலும் ஈடுபடுகின்றோம்.

புதிய அரசியலமைப்பு, புதிய தேர்தல் முறைமை, அதிகாரப்பகிர்வு என்பன இவற்றிற்கு அவசியமானவை. ஆனால் அதை ஏற்படுத்துவது இலகுவான காரியமில்லை. அனைவரையும் இணைத்து செயற்படவே நாம் விரும்புகின்றோம்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts