Ad Widget

வடக்கில் பெண்கள் தலைமையில் குடும்ப நலன்களைக் கவனிக்க புதிய அலுவலகம்!

வட மாகாணத்தில் உள்ள பெண்களைத் தலைமையாகக் கொண்ட குடும்பங்களின் நலன்களைக் கவனிப்பதற்கென தலைமையகம் ஒன்றை அமைப்பதற்கு யாழ்ப்பாணத்திற்கு முதற் தடவையாக ​நேற்று (27) விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்ட முக்கிய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ranil-jaffna

வட மாகாணத்திற்கு 3 நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்குச் சென்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.

யாழ். அரச செயலகத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஈபிடிபி, ஐக்கிய தேசிய கட்சி ஆகிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட நிகழ்வொன்றில் வட மாகாணத்தில் உள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டிருக்கின்றது.

பெண்களைத் தலைமையாகக் கொண்டுள்ள குடும்பங்களின் நலன்கள் மற்றும் வாழ்வாதாரம், இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வருவதனால் உள்ளுர் மீனவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் என்பன குறித்து இந்த நிகழ்வில் ஆராயப்பட்டிருக்கின்றது.

ஆயினும், பெண்களைத் தலைமையாகக் கொண்டுள்ள குடும்பங்களின் நலன்களுக்கான தலைமையகம் ஒன்றை நிறுவுவது தவிர ஏனைய பிரச்சினைகளுக்கு ஆக்கபூர்வமான பதிலேதும் பிரதமரினால் வழங்கப்படவில்லை என்று இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராகிய சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.

வட மாகாணத்தில் உள்ள பெண்களைத் தலைமையாகக் கொண்டுள்ள குடும்பங்களுக்கான தலைமையகத்தை, யாழ்ப்பாணத்தில் நிறுவுவதிலும் பார்க்க, அந்த மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களுக்கும் பொதுவாக கிளிநொச்சியில் நிறுவ வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கோரியிருப்பதாகவும் அதனை பிரதமர் ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

அதேவேளை, இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய வருகையினால் பாதிக்கப்பட்டுள்ள உள்ளுர் மீனவர்களின் பிரச்சினைகளை பிரதமருடன் விவாதிப்பதற்குப் போதிய நேரம் கிடைக்காத காரணத்தினால், மீன்பிடித்துறை அமைச்சரை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி அந்தப் பிரச்சினை குறித்து விரிவாக ஆராய்வதற்கு இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

விசேட வானூர்தி மூலமாக பலாலி விமானத்தளத்தைச் சென்றடைந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதி அமைச்சர் விஜயகலா வரவேற்றிருந்தார். அங்கிருந்து நாகவிகாரைக்குச் சென்று வழிபட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற பெண்களைத் தலைமையாகக் கொண்ட பெண்களின் ஆரோக்கியத்திற்கான நிகழ்வில் கலந்து கொண்டார்.

அதன் பின்னர் யாழ் அரச செயலகத்தில் நடைபெற்ற பல்வேறு தரப்பினருடனான சந்திப்பிலும் கலந்து கொண்டார்.

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய டக்ளஸ் தேவானந்தா, இரகசிய முகாம்களில் பலர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருப்பதைச் சுட்டிக்காட்டி, அது குறித்து பிரதமரிடம் கேள்வி எழுப்பியபோது, அவ்வாறான இரகசிய முகாம்கள் தமது ஆட்சிக்காலத்தில் கிடையாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதிலளித்தார்.

ஆயினும் கடந்த ஆட்சிக்காலத்தில், இத்தகைய இரகசிய முகாம்கள் இருந்ததாகவும், இதற்கான ஆதாரங்கள் சாட்சியங்கள் இருப்பதாகவும், அது குறித்து விரிவான விசாரணைகள் நடத்தி, அந்த முகாம்களில் இருந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி கண்டறிய வேண்டும் என்று, இந்தச் சந்திப்பின்போது பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரதமரின் விஜயத்தை முன்னிட்டு நிகழ்வுகளில் வட மாகாண முதலமைச்சர் புறக்கணிக்கப்பட்டிருப்பதைக் கண்டித்துள்ள யாழ் மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராகிய சிறிதரன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் தானும் பங்குகொள்ளாமல் அவற்றைப் புறக்கணிப்பதாக அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்குச் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் மற்றும் தென்னிந்திய திருச்சபையின் ஆயர் டேனியல் கனகராஜா ஆகியோரையும் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Related Posts