வடக்கில் நுண்கடன் பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சு: மாவை

யாழ் பிரதேச செயலக எல்லைக்குள் நுண்கடன் வழங்கும் நிதி நிறுவனங்களால் பெண்கள் பாதிக்கப்படுவது தொடர்பாக, மீண்டும் அரசாங்கத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடாத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) பிரதேச செயலக கேட்போர் கூட த்தில் இடம்பெற்ற போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன் போது, ஒரு இலட்சத்திற்கும் குறைவான கடன்களை பெற்று அந்தக் கடனை திருப்பி செலுத்த இயலாத மக்களின் கடனை அரசு செலுத்தவுள்ளது. இந்நிலையில் பிரதேச செயலக எல்லைக்குள் வாழும் மக்கள் தாம் பெற்ற கடன்களை குறித்து வெளியே சொல்வதற்கு அச்சப்படுகிறார்கள்.

கூடுதலான இடங்களில் கடன்களை பெற்றவர்கள் தொடர்பாக இந்த இடத்தில் நாங்கள் எதனையும் பேச முடியாது. அதனை அரசாங்கத்துடன் கலந்துரையாடிய பின்னரே கூற முடியும் என்றார்.

இந்த விடயம் யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல வடமாகாணம் முழுவதும் இவ்வாறான பிரச்சினைகள் இருந்து கொண்டிருக்கின்றன. மக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

எனவே இங்கு பேசப்பட்ட இந்த நுண்கடன் தொடர்பான விடயங்களை பதிவு செய்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து திறைசேரி அதிகாரிகளையும் வைத்து பேசி தீர்மானங்களை எடுக்கலாம் என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

Related Posts