Ad Widget

வடக்கில் சிங்கள, முஸ்லீம் மக்கள் குடியேற்றங்கள்; கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு

வடக்கில் யுத்ததினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மீள்குடியேற்றப்படாத நிலையில், இடம்பெயர்ந்த சிங்கள, முஸ்லிம் மக்களை அங்கு மீள்குடியமர்த்தும் அரசாங்கத்தின் யோசனைக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்றத்திலும் தமது எதிர்ப்பை வெளியிடவுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

யுத்தத்தினால் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த 5 ஆயிரத்து 543 சிங்க மக்களையும், 16 ஆயிரத்து 120 முஸ்லீம்களையும் மீளக்குடியமர்த்தும் யோசனைக்க அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

21 ஆயிரத்து 663 வீடுகள் தேவைப்படுவதாக ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்திருக்கும் நிலையில், இந்த எண்ணிக்கையில் சந்தேகம் எழுவதாக சாள்ஸ் நிர்மலநாதன் மேலும் தெரிவித்தார்.

அத்தோடு, இந்த மீள்குடியேற்றம் தொடர்பாக வடமாகாண மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடம் கலந்துரையாடாது அரசாங்கம் தன்னிச்சையாக செயற்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் குற்றம் சுமத்தினார்.

யாழ். மாவட்டம் என்பது தமிழ் மக்கள் செறிந்துவாழும் பகுதி என்ற நிலையில் சிங்கள மக்களை அங்கு குடியமர்த்தும் நோக்கத்தில் அரசாங்கத்தின் மறைமுகத்திட்டம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அடுத்த வாரம் 7ஆம் திகதி கூடவுள்ள நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பவிருப்பதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் மேலும் தெரிவித்தார்.

யுத்த சூழ்நிலையில் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த சிங்க மற்றும் முஸ்லிம் மக்கள் புத்தளம் மற்றும் தென்னிலங்கை பகுதிகளில் வாழ்ந்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இவர்கள் இடம்பெயர்ந்த பகுதிகளில் மீள்குடியமர்த்துவதற்கான யோசனையை அமைச்சர்களான சுவாமிநாதன், ரிஷாத் பதியூதின் ஆகியோர் அமைச்சரவைக்கு கடந்த வாரம் கொண்டுவந்திருந்தனர். இதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts