Ad Widget

வடக்கிற்காக நாம் செய்தவற்றை அன்று சர்வதேசம் மதிக்கவில்லை

விடுதலைப் புலிகளை தோற்கடித்து வடமாகாண சபைத் தேர்தலை நடத்தி அந்த மக்களுக்கு ஜனநாயக உரிமையை பெற்றுக் கொடுக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட நடவடிக்கைகளை சர்வதேச சமூகத்தால் வரவேற்கப்படவில்லை என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறினார்.

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ரியர் எட்மிரல் மொஹான் விஜேவிக்ரம மற்றும் வடமாகாணத்தின் முன்னாள் ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகியோர் இணைந்து எழுதியிருந்த “குழப்பநிலை மற்றும் ஸ்திரத்தன்மை” என்ற நூலின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி நிறுவனத்தில் நேற்று பிற்பகல் நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ,

வடமாகாண சபை தேர்தலை நடத்த தயாரான போது, அவ்வாறு தேர்தலை நடத்தினால் அதில் தோல்வியடையலாம் என்று டக்ளஸ் தேவானந்தா கூறினார்.

அதேபோல், அந்த தேர்தலினால் தமிழ் தேசிய கூட்டமைப்பு பலம்பெறும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்தன் தன்னிடம் கூறியதாக கோட்டாபய ராஜபக்ஷ கூறினார்.

எவ்வாறாயினும், வட மாகாண சபைத் தேர்தலை நடத்தி அந்த மக்களுக்கு ஜனநாயக உரிமையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இருந்ததாக அவர் கூறினார்.

யுத்தத்தின் பின்னர் வடக்கு, கிழக்கு பிரதேசங்களை அபிவிருத்தி செய்து, அப் பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக பாரிய வேலைத் திட்டங்களை முன்னெடுத்ததாகவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறினார்.

Related Posts