Ad Widget

வடக்கின் வன்முறைகளுடன் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு?- டக்ளஸ்

வடக்கின் வன்முறை சம்பவங்களுடன் அரசியல்வாதிகளும் தொடர்புபட்டுள்ளனரா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளதாக, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற கேள்வி நேரத்தின்போதே செயலாளர் நாயகம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சபையில் தொடர்ந்து உரையாற்றிய அவர், ”வடக்கின் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக ஒரு சில நபர்கள் கைது செய்யப்படுவதாகக் கூறப்பட்டாலும், அந்த நபர்கள் உண்மையிலேயே மேற்படி சம்பவங்களுடன் தொடர்பு கொண்டவர்களா? என்ற சந்தேகம் எழுகின்றது. இதேவேளை, மேற்படி சம்பவங்களுடன் தொர்புடையதாக ஆதாரங்களுடன் கைது செய்யப்படுகின்ற நபர்களை சட்டத்தரணிகளான உள்ளூர் அரசியல்வாதிகள் காப்பாற்ற முன்வருகின்ற நிலையில், இத்தகைய அரசில்வாதிகளுக்கு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எமது மக்கள் மத்தியில் இருந்து வருகின்றது.

இத்தகைய சம்பவங்கள் தொடர்பில் கருத்து கூறுகின்ற சிலர், இது ஏதோ தமிழ்த் திரைப்படப் பாணியிலான தாக்குதல்கள் எனக் குறிப்பிடுவதை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது. இத்தகைய சம்பவங்களின் பின்னணியில் ஏதோவொரு சக்தி மறைமுகமாக இயங்குவதாகவே தெரியவருகின்றது. அந்தவகையில் இத்தகைய வன்முறைக் குழுக்கள் செயற்படுகின்றனவா? அல்லது செயற்படுத்தப்படுகின்றனவா? என்ற கேள்வி எழுகின்றது.

தென்பகுதியிலும் கொலைகள், கொள்ளைகள் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதைக் காண முடிகின்ற போதிலும், யாழ். குடாநாட்டில் இத்தகைய வன்முறைச் செயற்பாடுகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதாகவே தெரியவருகின்றது.

யாழில் சட்டம், ஒழுங்கு நடவடிக்கைகளை பேணுவதில் திறமை, ஆளுமையற்று செயற்படும் பொலிஸ் அதிகாரிகளை மாற்றி, திறமையும், ஆளுமையும் கொண்ட அதிகாரிகளை நியமித்து, இப்பிரச்சினையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாதா?” என்றும் கேள்வி எழுப்பினார்.

Related Posts