வடக்கின் அபிவிருத்திக்கு ஜப்பான் முன்னுரிமை – ஜப்பானிய தூதுவர்

jappanஇலங்கையின் அபிவிருத்தியில் பாரிய பங்களிப்பை வழங்கி வரும் ஜப்பான் அரசாங்கம், வடக்கின் அபிவிருத்திக்கு அதிக முன்னுரிமை கொடுத்து வருகின்றதாக ஜப்பானிய தூதுவர் நொபுஹித்தோ ஹோபோ தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜப்பானிய தூதுவருக்கும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறிக்கும் இடையில் இன்று புதன்கிழமை (05), காலை ஆளுநர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது வட மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள், வடமாகாணத்தில் ஜப்பான் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் எவ்வாறான உதவிகள் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்படல் வேண்டும் என்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக ஆளுநர் செயலகம் தெரிவித்தது.

ஆளுநருடனான சந்திப்பினைத் தொடர்ந்து, ஜப்பான் தூதுவர் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை, சோமசுந்தரம் அவனியூவிலுள்ள வடமாகாண உள்ளுராட்சி அமைச்சின் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பின் போது, வட மாகாணத்தில் மருத்துவமும், மீள்குடியேறிய மக்களின் வாழ்வாதார வசதிகளும் மேம்படுத்தப்பட வேண்டும் என ஜப்பான் தூதுவரிடம் தெரிவித்தாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வட மாகாணத்தில் ஜப்பான் நாட்டின் நிதியுதவியுடன் நடைபெறும் ந்ஐய்கா வேலைத்திட்டம் பற்றி தூதுவர் என்னிடம் கேட்டார். அத்துடன், வடமாகாணத்தில் எவ்வாறான அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார் என்று சி.வி. விக்னேஸ்வரன் கூறினார்.

வட மாகாணத்தில் குறிப்பாக வன்னி மக்களுக்கு மருத்துவ ரீதியான தேவைகள் அதிகமாக இருக்கின்றன. அம்மக்களின் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அம்பியூலன்ஸ் வண்டிகள் தேவையாக இருக்கின்றன. அத்துடன், மக்களின் வாழ்வாதார வசதிகளையும் மேம்படுத்த வேண்டிய தேவை இருப்பதாக ஜப்பான் தூதுவரிடம் எடுத்துக்கூறினேன்.

இது தொடர்பாக ஜப்பான் அரசாங்கத்துடன் பரிசீலனை மேற்கொண்டு சாதகமான பதில் வழங்குவதாக தூதுவர் என்னிடம் தெரிவித்தார் என்று விக்னேஸ்வரன் கூறினார்.

அத்துடன், ஜப்பான் அரசாங்கம் முழு இலங்கையின் அபிவிருத்தியிலும் பாரிய பங்களிப்பை வழங்கி வருகின்றதுடன், வடக்கின் அபிவிருத்திக்கும் அதிக முன்னுரிமை கொடுத்து வருகின்றதாக தூதுவர் தெரிவித்ததாக முதலமைச்சர் மேலும் கூறினார்.

Related Posts