Ad Widget

வடக்கின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார்? – சுமந்திரன்

வடக்கு மாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக இன்னும் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அடுத்த மாகாண சபைத் தேர்தலில் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக மீளவும் சி.வி.விக்னேஸ்வரனையே முன்னிறுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து வினவியபோது அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லையெனக் குறிப்பிட்டார். அத்தோடு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர்கள் தொடர்பாக சரியான நேரத்தில் அறிவிப்போம் என்றும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வடக்கு முதல்வராக தெரிவுசெய்யப்பட்ட விக்னேஸ்வரன், கூட்டமைப்பிற்கு எதிராக செயற்பட்டு வருவதாக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பான சர்ச்சை தொடர்ந்தும் நீடித்து வருகின்றது.

இந்நிலையில், கூட்டமைப்பின் பொதுச் செயலாளரான மாவை சேனாதிராஜாவை அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்க தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதேவேளை, அடுத்த மாகாண சபை தேர்தலில் சி.வி.விக்னேஸ்வரன், கூட்டமைப்பு அல்லாத மாற்றுக் கட்சியொன்றின் ஊடாக முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts