Ad Widget

லயன்எயார் விமானத்திலிருந்து மீட்கப்பட்ட அடையாள அட்டைக்குரிய பெண் உயிருடன் உள்ளார்!

lianair-ICதமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அரசாங்கத்தினால் குற்றஞ்சாட்டப்படும் லயன் எயார் விமான பாகங்களோடு மீட்கப்பட்ட அடையாள அட்டைக்குரிய பெண்ணொருவர் உயிரோடு இருப்பது தெரியவந்துள்ளது.

விமானம் வெடித்து சிதறியபோது இந்த பெண் உயிரிழந்திருக்கலாம் என்று முன்னர் கருதப்பட்டது. ஆனால் இவர் சிறுப்பிட்டி வடக்கு நீர்வேலிப் பகுதியில் தற்போதும் உயிரோடு வாழ்ந்து வருகின்றார்.

இவரது பெயர் குணமணி கோவிந்தசாமி (59 வயது) (547642317V)என்பதாகும்.

1998 ஆம் ஆண்டு செம்டம்பர் மாதம் 29 ஆம் திகதி பலாலியிலிருந்து இரத்தலானை நோக்கி 42 பயணிகளுடனும் 8 விமானப்படைச் சிப்பாய்களுடனும் லயன் எயார் அன்ரனோவ் 24 ரக இந்த விமானம் பயணித்த போது இரணை தீவக்கடலில் வீழ்ந்தது.

இவ் விமானத்தின் பாகங்களை மீட்கும் நடவடிக்கைகள் கடந்த 03ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட போதே இந்த அடையாள அட்டையும் மீட்கப்பட்டுள்ளது. ஆனால் கறுப்பு பெட்டி இன்னமும் மீட்கப்படவில்லை.

1995 ஆம் ஆண்டு நீர்வேலி சிறுப்பிட்டியில் வசித்து வந்த இப்பெண் திருமணம் ஆனதையடுத்து, தனது பெயருடன் கணவரது பெயரை பதிவு செய்யும் நோக்குடன் குணமணி பாலசுப்பிரமணியம் என்று பெயருக்கு மாற்றம் செய்ய கிராம சேகவர் ஊடாக ஆட்பதிவு திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதன் பின்னர் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த அவர் வன்னி மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளார். இன் நிலையில் அடையாள அட்டை வந்ததினை அயல் வீட்டுக்காரர்கள் அவருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அடையாள அட்டையை யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிக்கு வரும் உறவினர் ஒருவரிடம் கொடுத்து விடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அவர் விமானத்தில் அடையாள அட்டையோடு செல்லும் போது விமானம் கடலில் வீழ்ந்துள்ளது. இதனால் அடையாள அட்டை அவரது கையில் கிடைக்காமலே போய் விட்டது. இதனைத் தொடர்ந்து வெளிநாடு செல்வதற்காக அடையாள அட்டை ஒன்றை பெற்றுக்கொண்டுள்ளார்.

ஆனால் அதுவும் சிறிது காலத்தில் மீண்டும் தொலைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இறுதியாக 2012ஆம் ஆண்டு 4ஆம் மாதம் 05ஆம் திகதி இறுதியாக அவர் அடையாள அட்டையைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவரது வீட்டிற்கு சென்ற பயங்கரவாதத் தடுப்பு பொலிஸார் விபரத்தை தெரிவித்த போது அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனார்.

Related Posts