Ad Widget

ராணுவ ஆக்கிரமிப்பிலிருந்த கேப்பாப்புலவு மக்கள் காணிகள் விடுவிப்பு!

கேப்பாப்புலவில், இலங்கை ராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் இருந்த பொதுமக்களுக்குச் சொந்தமான 133 ஏக்கர் காணிகள் இன்று (வியாழக்கிழமை) உத்தியோகபூர்வமாக விடுக்கப்பட்டது.

காணிகள் விடுக்கப்பட்ட போதிலும், காணி அளவீடுகளின் பின்னரே மக்கள் அங்கு செல்வதற்கு அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேப்பாப்புலவில் பொதுமக்களின் காணிகளில், இலங்கைப் படையினர் அமைத்துள்ள படைத்தளங்களை இடம்மாற்றுவதற்கு, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற அமைச்சு 148 மில்லியன் ரூபாவை ராணுவத்துக்கு வழங்கியிருந்தது.

இதையடுத்து, படைத்தளங்கள் இடம்மாற்றப்பட்டு, இன்று பொதுமக்களின் 133 ஏக்கர் காணிகள் அதிகாரபூர்வமாக கையளிக்கப்பட்டது. அதன்படி, குறித்த பகுதிகளில் எதிர்வரும் மூன்று தினங்களுக்குள் மக்களை குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் பிரதேச சபையினூடாக முன்னெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ராணுவம் வசமிருந்த கேப்பாப்புலவு கிராமத்தின் வற்றாப்பளை பிரதான வீதியையும் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் மக்கள் பாவனைக்காக திறப்பதாகவும் ராணுவத்தினர் உறுதியளித்துள்ளனர்.

காணிகளை கையளிக்கும் நிகழ்வில் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் பரஞ்சோதி, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன், பிரதேச செயலாளர், கிராம சேவையாளர், இராணுவத் தளபதிகள், காணி உரிமையாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

கேப்பாப்புலவில் இலங்கைப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது நிலங்களை விடுவிக்கக்கோரி, காணி உரிமையாளர்கள் கடந்த 300 நாட்களுக்கு மேலாக போராடி வந்தமை குறிபிப்படத்தக்கது.

Related Posts