Ad Widget

ராஜிவ்வை கொன்றது புலிகளே; யுத்த வலயத்திலிருந்து மக்களை வெளியேற்ற பிரபாகரன் மறுத்து விட்டார்: எரிக் சொல்ஹெய்ம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை விடுதலைப் புலிகளே கொலை செய்தார்கள் என அந்த அமைப்பின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் தெரிவித்ததாக, இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

அவரது ருவிற்றர் பதிவொன்றில் நடந்த உரையாடலில் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சமாதான முன்னெடுப்புக்களிற்கு இந்தியா உறுதியான ஆதரவை வழங்கி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் தனிநாட்டு கோரிக்கையை சர்வதேச சமூகம் ஒப்புக்கொள்ளவில்லை. நாங்களோ, இந்தியாவோ, அமெரிக்காவோ, சீனாவோ, ஐரோப்பிய ஒன்றியமோ அல்லது வேறு எவரும் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இலங்கைக்கு கூட்டாட்சி தீர்வு தருவதே அமைதி நடைமுறையின் நோக்கமாக இருந்தது. பெரும்பான்மையான தமிழர்கள் அதனால் மகிழ்ந்திருப்பார்கள்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ளவர்கள் விடுதலையானால் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். ராஜிவ்வை கொன்ற விடுதலைப்புலிகளில் நான் எந்த அன்பையும் கொண்டிருக்கவில்லை.

இதேவேளை, ருவிற்றர் வாசியொருவர் கருத்திட்டபோது- ராஜிவ்வை புலிகள் கொல்லவில்லை, புலிகளே அதை சொல்லியுள்ளனர். அதற்கான ஆதாரமிருந்தால் உலகிற்கு வெளிப்படுத்துமாறும் கோரினார்.

இதற்கு பதிலளித்த சொல்ஹெய்ம்- புலிகளே அந்த கொலையை செய்தார்கள் என்பதை அன்ரன் பாலசிங்கம் தன்னிடம் தெரிவித்ததாக குறிப்பிட்டார். அன்ரன் பாலசிங்கத்துடன் நூற்றுக்கணக்கான மணித்தியாலங்கள் உரையாடியதாகவும், புலிகளின் உள் விவகாரங்கள் நன்றாக தனக்கு தெரியுமென நம்புவதாகவும் சொன்னார்.

யுத்தத்தின் இறுதியில் அரசு, புலிகளுடன் தொடர்பிலிருந்து, யுத்தத்தை நிறுத்த தன்னால் முடிந்ததை செய்ததாக தெரிவித்தார்.

பொதுமக்கள், விடுதலைப்புலிகளை யுத்த வலயத்திலிருந்து வெளியேற்ற தாம் முயற்சித்ததாகவும், ஆனால் பிரபாகரன் அதற்கு இணங்கவில்லையென்றும் தெரிவித்தார். பொதுமக்களை யுத்த வலயத்திலிருந்து வெளியேற்றும் முடிவிற்கு பிரபாகரன் இணங்கவில்லையென்றும் குற்றம்சாட்டினார். அதேவேளை, பாதுகாப்பு வலயத்தில் இராணுவம் குண்டுவீச்சு, செல் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்தார்.

இலங்கை தமிழர்கள் மற்றும் ஏனைய சிறுபான்மையினர் தமது உரிமைகளை வென்றெடுக்க மேலும் நீண்டகாலம் பயணிக்க வேண்டும். வன்முறை இல்லாத வேறு வழிகளில் பல்வேறு போராட்டங்களை அவர்கள் நடத்த வேண்டும்.

Related Posts