விசாரணை ஒன்று தொடர்பாக வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணை அதிகாரிகளால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு இணங்க, ரவி கருணாநாயக்க திங்கட்கிழமை (31) காலை சுமார் 8:15 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்குச் சென்றார். அங்கு அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர்.
தேசிய லொத்தர் சபைக்கு அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு முறைகளுக்குப் புறம்பாக ஒப்பந்த அடிப்படையில் ஐவர் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டு, பின்னர் முன்னாள் அமைச்சரின் தனிப்பட்ட பணியாளர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டமை தொடர்பிலான குற்றச்சாட்டே இந்த விசாரணையின் மையமாக உள்ளது.
இதற்கு முன்னர் விசாரணை ஆணையத்திற்கு முன்னிலையாகுமாறு ரவி கருணாநாயக்கவிற்கு நான்கு முறை அழைப்பாணை விடுக்கப்பட்ட போதிலும், அவர் சமூகமளிக்கவில்லை என விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், இந்த விசாரணை தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகள் இரண்டு நாட்களுக்கு முன்னர் பத்தரமுல்லை, ராஜமால்வத்தை வீதியில் உள்ள அவரது இல்லத்திற்கும் சென்றிருந்தனர். எனினும், அந்தச் சமயம் ரவி கருணாநாயக்க வீட்டில் இருக்கவில்லை.