நிரந்தரத் தீர்வு கிடைக்கும்வரை போராட்டங்கள் தொடரும்: சுரேஸ்

வடக்கு- கிழக்கிலுள்ள தமிழர்கள் கௌவரமாக வாழக்கூடிய சூழல் ஒன்று உருவாக்கப்படும்வரை போராட்டங்கள் தொடர வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தியாகி பொன்.சிவகுமாரனின் 44 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழ். உரும்பிராய் பிரதேசத்திலுள்ள அவரது உருவச்சிலைக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இவ்வளவு பாரிய போராட்டங்களை மக்கள் முன்னெடுத்தும் பல பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்தும் தமிழர்களது தேசியப் பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்பதில் சிங்கள அரசுகள் எதுவித அக்கறையும் கொண்டிருக்கவில்லை.

எமது போராட்டத்திற்காக பெரிய விலைகளையும் தியாகங்களையும் நாம் கொடுத்திருக்கின்றோம். எனவே தமிழ் மக்கள் இந்த மண்ணில் சுதந்திரமாக வாழ்வதற்கான நிலைமையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

அவ்வாறான சூழல் ஏற்படுத்தப்படும் வரை தமிழர்கள் பல்வேறுபட்ட வடிவங்களில் தமது போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய தேவையுள்ளது.

எனவே தமிழ் மக்களது தேசிய இனப்பிரச்சினைக்கு அவர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய நிரந்தரமான தீர்வினைப் பெற்றுக் கொள்ளாத வரை இந்த நாடு தொடர்ந்தும் பொருளாதார சமூகப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துக் கொண்டே இருக்கும்.

ஆகவே இந்த விடயத்தில் நாம் அனைவரும் ஒன்று பட்டுச் செயற்படுவதற்கான சூழலை ஏற்படுத்தி எமது போராட்டங்களைத் தொடரவேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related Posts