Ad Widget

ரணிலை எம்முடன் இணைக்க ஒரு கோப்பை தேநீர் போதும் -மகிந்த

“சில அம்மையார்கள் வந்து எதற்கும் பயப்பட வேண்டாம் என்று கூறுகின்றனர். அத்துடன் எமக்கு எதிராக ஆணைக்குழு அமைத்து விசாரிக்கப்போகிறார்களாம். ஆணைக்குழுவை அமையுங்கள். நாங்கள் பயப்படவில்லை. எனது கையில் இரத்தம் தோயவில்லை. எனது கையில் அழுக்குப் படியவில்லை. அவ்வாறு இரத்தம் தோய்ந்தும் அழுக்குப் படிந்தும் இருந்தால் எனது கைகளை நானே வெட்டிவிடுவேன்.” – இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

anurathapura-mahintha “அவர்கள் எம்மிடமிருந்து செயலாளரை எடுத்தனர். நாங்களும் அவர்களின் செயலாளரை எடுத்தோம். அவர்கள் ஒன்று செய்தால் நாங்களும் ஒன்று செய்வோம். நான் நினைத்தால் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும் எடுப்பேன். அதற்கு ஒரு கோப்பை தேநீரே போதுமானது.

திஸ்ஸ அத்தநாயக்கவை எடுக்கவும் ஒரு கோப்பை தேநீரே தேவைப்பட்டது. ரணில் எம்முடன் ஒரு கோப்பை தேநீர் அருந்தினால் மறுநாள் எம்முடன் இணைவார்” என்றும் ஜனாதிபதி மஹிந்த குறிப்பிட்டார்.

அநுராதபுரத்தில் நேற்று வியாழக்கிழமை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதித் தேர்தலுக்கான முதலாவது பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மஹிந்த மேற்படிக் கருத்துக்களைக் கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;

“2005 ஆம் ஆண்டு நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட போது யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருமாறு மக்கள் எனக்கு ஆணையிட்டனர். அதன்படி, ஆட்சிக்கு வந்து 4 வருடங்களுக்கும் குறைவான காலத்தில் 30 வருடகாலமாக நாட்டை அழித்த யுத்தத்தை முடித்தேன்.

பின்னர் 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட போது நாட்டை அபிவிருத்திப் பாதையை நோக்கு கொண்டுச் செல்வதாக உறுதியளித்தேன். தற்போது அதுவும் நடந்துக் கொண்டிருக்கிறது. எமக்கு நாட்டினதும், நாட்டு மக்களதும் எதிர்க்காலமே மிக முக்கியம். அதற்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராகவே இருக்கிறோம்.

ஆனால், தற்போது ஒரு சில சர்வதேச சக்திகள் இலங்கையை சிரியா, ஈராக், எகிப்து நாடுகளைப் போன்று மாற்ற முயன்று வருகின்றன. இதற்கு அரசாகிய நாம் மட்டுமல்ல, மக்கள் கூட அனுமதியளிக்கப்போவதில்லை. அத்தோடு, நான் எதிரணியில் உள்ளவர்களை அரசின் பக்கம் சேர்க்க பணம் கொடுப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், பணத்தை வீணாக்க நான் ஒருபோதும் விரும்பியதில்லை. கண்டியில் பொது எதிரணியினர் நடத்திய கூட்டத்திற்கு நான் இங்கு பதலளிக்க மாட்டேன்.

மாறாக இங்கு கூடியிருக்கும் நீங்களே அதற்கு தகுந்த பதிலை தற்போது அளித்து விட்டீர்கள். துரோகிகளுக்கு எப்போதும் நாட்டு மக்கள் எதிர்ப்பையே தெரிவிப்பார்கள் என இந்த மக்கள் கூட்டம் மீண்டுமொருமுறை காட்டிவிட்டது.

பொது எதிரணியினர் நாட்டில் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்படவில்லை என கூற முடியுமா? நாட்டில் வீதிகள் அபிவிருத்தி செய்யப்படவில்லை எனக் கூற முடியுமா? அல்லது நாடு அபிவிருத்திப் பாதையில் செல்லவில்லை என்றாவது கூற முடியுமா? – முடியாது.

அதனால், தற்போது நாட்டின் அரசமைப்பை மாற்றியமைக்க வேண்டும் என இவர்கள் தேர்தல் களத்தில் குதித்துள்ளனர். நான் நாட்டில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து விட்டேன். விடுதலைப்புலிகளோ சர்வதேசத்தில் இன்னமும் இருக்கிறார்கள். இவர்கள் அவ்வப்போது வந்து விட்டு குழப்பி விட்டு சென்று விடுவார்கள்.

அத்தோடு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்ஸில் போருக்குக் கட்டளையிட்ட தளபதி யார் என விசாரணை செய்ய ஆரம்பித்து விட்டது. முப்படைகளின் தளபதி என்ற வகையில் என்னைக் கவிழ்க்க வேண்டும் என சர்வதேசத்தினர் மேற்கொள்ளும் சதியே இது. ஆகவே, இதுகுறித்து மக்கள் சிந்திக்க வேண்டும்.

Related Posts