யாழ்ப்பாண மாநகர சபையின் சைவ சமய விவகாரக் குழு வருடந்தோறும் வழங்கும் யாழ்.விருது இம்முறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர் க.தேவராஜா அவர்களுக்கு வழங்கப்படுவதாக யாழ்.மாநகரசபையின் ஆணையாளரும், சைவசமய விவகாரக் குழுவின் தலைவருமான செ.பிரணவநாதன் அறிவித்துள்ளார்.
யாழ்.மாநகர சபையின் சைவசமய விவகாரக் குழுவின் மகாசபை நேற்றையதினம் ஆணையாளர் செ.பிரணவநாதன் தலைமையில் யாழ். மாநகர சபை மண்டபத்தில் கூடியபோது,2015ஆம் ஆண்டுக் கான யாழ்.விருதை பேராசிரியர் க.தேவராஜாவிற்கு வழக்குவதென ஏகமனதாக முடிவுசெய்தது.
சமூக, சமயப் பணிகளில் அதீத ஈடுபாடு கொண்ட பேராசிரியர் க.தேவராஜா அவர்கள் இணுவில் மண்ணில் சைவப் பண்பாடும் பாரம்பரியமும் கட்டிக்காக்கப்படுவதற்கு உறுதுணையாக இருந்து வருபவர்.
கல்வி கற்பதற்கு வசதி யற்ற மாணவர்களுக்கு வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதில் பேராசிரியர் தேவராஜாவின் வகிபங்கு பலராலும் போற்றப்பட்டுள்ளது.
இணுவில் பொது நூலகத்தின் ஸ்தாபகர்களில் ஒருவராக இருந்து பொது நூலகத்தினூடாக மாணவர்களுக்கு கற்றல் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதில் பேராசிரியர் க.தேவராஜா ஆற்றிவரும் பங்கு முக்கியமானது.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழக சமூகத்தில் அனைவரதும் மதிப்புக்குரியவராக விளங்கும் பேராசிரியர் தேவராஜா அவர்கள் வணிக பீடத்தின் பீடாதிபதியாகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கான யாழ். விருது நல்லைக்குமரன் மலர் வெளியீட்டின் போது வழங்கப்படும் என ஆணையாளர் செ.பிரணவநாதன் அறிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த வருடத்துக்கான யாழ்.விருது சர்வதேச இந்துக் குருமார் ஒன்றியத்தின் தலைவர் வணக்கத் துக்குரிய சிவஸ்ரீ சபாவாசு தேவக்குருக்களுக்கு வழங்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.