Ad Widget

யாழ். வர்த்தக சங்கம், அரசாங்கத்திடம் 5 கோரிக்கைகளை முன்வைத்தது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் உருவாகியுள்ள புதிய அரசாங்கத்திடம், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் காரணமாக இலங்கைக்கு வரமுடியால் வெளிநாடுகளில் இருப்பவர்கள், இலங்கைக்கு வந்து செல்வதற்கான அனுமதி உள்ளிட்ட 5 கோரிக்கைகளை முன்வைப்பதாக யாழ்.வர்த்தக சங்கத்தலைவர் எஸ்.ஜெயசேகரம் தெரிவித்தார்.

யாழ். வர்த்தக சங்கத்தில் வெள்ளிக்கிழமை (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கோரிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்கையில்,

சமாதானத்தை விரும்பியும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையிலுமே புதிய அரசாங்கத்தை மக்கள் ஆட்சிக்கு கொண்டு வந்துள்ளார்கள். எனவே, தமிழர்களின் உண்மையான பிரச்சனையை அறிந்து தீர்க்க வேண்டும் என்பது எமது வேண்டுகோள்.

வடபகுதி பாரிய பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இங்கு இயங்கி வந்த, பெரிய தொழிற்சாலைகள் போர் முடிந்து 5 வருடங்கள் கடந்தும் மீள ஆரம்பிக்கப்படவில்லை. கடந்த காலத்திலிருந்த அரசாங்கம் இவற்றை ஆரம்பிப்பதுக்கு முயற்சி எடுக்கவில்லை. இந்த அரசாங்கம் அவற்றை நிறைவேற்ற வேண்டும்.

அதன்மூலம், வேலைவாய்ப்பு பெற்றுக்கொள்ளவும் பொருளாதார ரீதியில் வடக்கை மீள் கட்டியெழுப்பவும் முடியும்.

உயர் பாதுகாப்பு வலையத்துக்குள் இருக்கும் மீன்பிடித் துறைமுகங்களை விடுவித்து அவற்றை நவீன முறையில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து பொருட்களை ஏற்றி இறக்குவதுக்கு அனுமதியளிக்க வேண்டும். இதன் மூலம் வடபகுதி வியாபாரிகள் ஏற்றுமதி இறக்குமதி நடவடிக்கைகளை மேற்கொள்ள இலகுவாக இருக்கும்.

பலாலி விமான நிலையத்தை பொதுமக்களின் பாவனைக்கு விடவேண்டும். அத்துடன், வெளிநாட்டுக்கான விமான சேவைகளை அங்கிருந்து ஆரம்பிப்பதுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இக்கோரிக்கையை இந்திய அரசாங்கத்திடமும் தூதரக அதிகாரிகளிடமும் விடுக்கின்றோம் என தெரிவித்தார்.

100 நாள் வேலைத்திட்டம் வரவேற்கத்தக்கது. அத்திட்டத்தையை உரிய முறையில் நடைமுறைப்படுத்தினால், நாட்டு மக்கள் சந்தோசமாக வாழமுடியும். சிறிய நடுத்தர தொழிற்சாலைகளை ஆரம்பிப்பவர்களுக்கு இலகுகடன் கொடுப்பது நன்மையான விடயம். அதன் மூலம் வடபகுதி மக்கள் நன்மை அடைய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts