யாழ். வன்முறைகளை கட்டுப்படுத்த விசேட பொலிஸ் படையணி!

யாழில் அதிகரித்துவரும் வன்முறைகளை கட்டுப்படுத்தும் வகையில் விசேட மோட்டார் சைக்கிள் படையணி களமிறங்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குறிப்பிட்டார்.

யாழ். பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதனை நிகழ்வு இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது. இதனை தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், யாழ். குடாநாட்டில் இனந்தெரியாதோரால் அரங்கேற்றப்பட்டுவரும் வாள்வெட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன.

இந்நிலையில், யாழப்பாணம், கோப்பாய், மானிப்பாய், சுன்னாகம் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் விசேட ரோந்து நடவடிக்கைகளுக்காக சுமார் 10 மோட்டார் சைக்கிள்கள் அடங்கிய விசேட பொலிஸ் அணியொன்று யாழில் களமிறக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 100இற்கும் அதிகமான சிவில் பொலிஸ் அதிகாரிகளும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறாக பொலிஸாரின் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஓரிரு வாரங்களுக்குள் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்து, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பொலிஸாரின் இச்செயற்பாட்டுக்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இதேவேளை, அண்மையில் கிராம சேவையாளர் ஒருவரை வாள்வெட்டுக் குழுவினர் அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக உரிய தடயங்கள் கிடைக்கப் பெற்றுள்ளமையால் விரைவில் குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுப்போம்” எனத் தெரிவித்தார்.

Related Posts