யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இம்முறை காலநிலையின் நிச்சயமற்ற தன்மை காரணமாக காலபோக நெற்செய்கை விளைச்சலில் பாதிப்பு ஏற்படும் என வடமாகாண பிரதி விவசாய பணிப்பாளர் கி.ஸ்ரீபாலசுந்தரம், திங்கட்கிழமை (19) தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இம்முறை 11 ஆயிரத்து 800 ஹெக்டேயரில் நெல் பயிரிடுவதற்கு திட்டமிடப்பட்டு, 10 ஆயிரத்து 900 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நெல் செய்கை செய்கை பண்ணப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் ஒப்பீட்டளவில் வர்த்தக ரீதியாக நெல் உற்பத்தி செய்வது கடினமான விடயம்.
யாழ் மாவட்டத்தில் குறைந்த செலவாக ஒரு புசல் நெல் உற்பத்தி செய்வதற்கு 750 ரூபாய் தொடக்கம் 800 ரூபாய் வரை செலவாகின்றது.
ஆனால் ஏனைய மாவட்டங்களில் ஒரு புசல் நெல் உற்பத்தி செய்வதற்கு 480 ரூபாய் தொடக்கம் 500 ரூபாய் வரை செலவாகின்றது.
யாழ். மாவட்டத்தில் மழை காலத்தில் மட்டுமே நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ளலாம். நீர் வழிந்தோடக்கூடிய நிலமும் நீரை சேமித்து வைத்து தேவையின் போது நீரைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வசதிகளும் இல்லை.
காலபோக செய்கையின் மானாவாரி (மழையை நம்பி) செய்கை மட்டுமே யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளமுடியும். இதனால் நெல் உற்பத்தி நிச்சயமற்றதாகக் காணப்படுகின்றது.
கடந்த 2014ஆம் ஆண்டு ஒக்டோபர், நவம்பர், டிசெம்பர் மாத காலங்களில் சூரிய வெளிச்ச நாட்களை ஒப்பிடும் போது 4 தொடக்கம் 5 நாட்கள் தான் சூரிய வெளிச்சம் பெறப்பட்டுள்ளது.
மற்றைய நாட்களில் முகில்கள் மறைப்புக்குள்ளாகி பயிர்களில் ஒளித்தொகுப்பு வீதம் குறைந்துள்ளது. இதனால் விளைச்சல் குறைவடையும் சந்தர்ப்பம் உள்ளது.
பெரும் மழை ஏற்பட்டதால் பயிர்களில் பல கதிர்கள் உருவாகும் தன்மை (மட்டம் வெடிக்கின்ற) பாதிப்படைந்துள்ளது.
அதனால் குறைந்தளவான கதிர்களைத்தான் இம்முறை பெறமுடியும். அதாவது ஒரு ஹெக்டேயருக்கு 2.5 மெற்றிக்தொன் தொடக்கம் 2.6 மெற்றிக்தொன் வரையில் தான் நெல் உற்பத்தியை எதிர்பாக்க முடியும் என அவர் மேலும் கூறினார்.