Ad Widget

யாழ் மாவட்டத்தில் தேர்தல் ஏற்பாடுகள்!

எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்க இம் முறை யாழ் மாவட்டத்தில் 5 லட்சத்து 29 ஆயிரத்து 239 பேர் தகுதி பெற்றுள்ளனர் என யாழ் மாவட்ட அரச அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிக்க ஊர்காவற்துறை தேர்தல் தொகுதியில் 22 ஆயிரத்து 57 பேரும், வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதியில் 47 ஆயிரத்து 621 பேரும், காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் 63 ஆயிரத்து 217 பேரும், மானிப்பாய் தேர்தல் தொகுதியில் 54ஆயிரத்து 567 பேரும், கோப்பாய் தேர்தல் தொகுதியில் 55ஆயிரத்து 891 பேரும், உடுப்பிட்டி தேர்தல் தொகுதியில் 39ஆயிரத்து 204 பேரும், பருத்தித்துறை தேர்தல் தொகுதியில் 36 ஆயிரத்து 138 பேரும், சாவகச்சேரி தேர்தல் தொகுதியில் 51 ஆயிரத்து 702 பேரும், நல்லூர் தேர்தல் தொகுதியில் 46ஆயிரத்து 699 பேரும், யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் 33 ஆயிரத்து 50 பேரும், கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் 79 ஆயிரத்து 93 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

மேலும் யாழ் மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கலுக்கான சகல ஏற்பாடுகளும் நிறைவு பெற்று நேற்று முன்தினம் (06) முதலாவது வேட்பு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள எட்டாவது நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் காலம் நேற்றுமுன்தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ் மாவட்ட செயலகத்தில் அதற்கான அனைத்தும் ஏற்பாடாகியுள்ளதாக யாழ் மாவட்ட அரச அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.என்.வேதநாயகன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில் –

விசேடமாக அமைக்கப்பட்டுள்ள வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் இடத்தில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் மாவட்ட செயலகத்தை சுற்றியும் வேட்பு மனு தாக்கல் செய்யும் காலப்பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் தேர்தல் காலங்களில் வரும் முறைப்பாடுகளை பதிவு செய்ய விசேட பொலிஸ் முறைப்பாட்டுப் பிரிவொன்றும் மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்களிப்பு நிலையம் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களின் ஏற்பாடுகளும் உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு எந்தவொரு இடையூறும் வராத வகையில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts