யாழ்ப்பாணம் மாவட்டத்தின் புதிய மாவட்டச் செயலாளராக கணபதிப்பிள்ளை மகேசன் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் இன்று காலை 9.30 மணிக்கு அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
மட்டக்களப்பு மேலதிக அரச அதிபராகவும் பொருளாதார அபிவிருத்தி மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் மேலதிக செயலாளராகம் பதவி வகித்த கணபதிப்பிள்ளை மகேசன், முதன்முறையாக மாவட்டச் செயலாளராக யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
1991ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடக்கம் மட்டக்களப்பு வாழைச்சேனை, வவுணதீவு மற்றும் செங்கலடி ஆகிய பிரதேச சபைகளின் சிறப்பு ஆணையாளராக அவர் பதவி வகித்திருந்தார். 2005ஆம் ஆண்டு முதல் சுனாமி வீடமைப்புத் திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளராகப் பதவி வகித்தார்.
கென்யாவுக்கான இலங்கை தூதரகத்தின் பதில் தூதுவராக பணியாற்றியுள்ளதோடு, உணவு ஊக்குவிப்பு ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் கணபதிப்பிள்ளை மகேசன் பதவி வகித்திருந்தார்.
இலங்கை நிர்வாக சேவையின் சிறப்புத் தரத்தில் உள்ள கணபதிப்பிள்ளை மகேசன், பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் அமைச்சரவையின் ஒப்புதலுடன் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளராக சேவையாற்றிய நாகலிங்கம் வேதநாயகன் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.