Ad Widget

யாழ். மத்திய கல்லூரியைச் சேர்ந்த 50 மாணவர்களும் விடுவிப்பு!!

யாழ்.மத்திய கல்லூரி மாணவர்கள் கடுமையான எச்சரிக்கைக்கு பின்னர் காவல்துறையினரினால் சில மணிநேரத்தில் விடுவிக்கப்பட்டுள்ளனர். யாழ்.மத்திய கல்லூரிக்கும் யாழ்.பரியோவான் கல்லூரிக்கும் இடையில் நடைபெறவுள்ள “வடக்கின் போர் ” என அழைக்கப்படும் துடுப்பாட்ட போட்டியினை முன்னிட்டு வீதிகளில் பாடசாலை சீருடைகளுடன் , பாடசாலை கொடிகளை அசைத்தவாறு பாண்ட் வாத்தியங்களை இசைத்து மகிழ்சிகளை வெளிப்படுத்திய யாழ்.மத்திய கல்லூரி மாணவர்கள் சுமார் 50 பேர் யாழ்ப்பாண காவல்துறையினரினால் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

காவல் நிலையத்தில் மாணவர்களை சில மணிநேரம் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் மாணவர்களை கடுமையாக எச்சரித்து விடுவித்தனர்.

அதேவேளை அவர்களின் பாண்ட் வாத்திய கருவிகள் , அவர்கள் பயணித்த வாகனம் என்பவற்றை காவல்நிலையத்தில் தடுத்து வைத்துள்ள காவல்துறையினர் அவற்றை பின்னர் வந்து எடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர்.

மாணவர்கள் காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அறிந்த சில மாணவர்களின் பெற்றோர்கள் காவல்நிலையத்திற்கு சென்றிருந்தனர். அவர்களின் பிள்ளைகளான மாணவர்களை காவல்துறையினர் பெற்றோரின் கைகளின் ஒப்படைத்தனர்.

யாழில் பாடசாலைகளுக்கு இடையில் நடைபெறும் துடுப்பாட்ட போட்டிகளின் போது குறித்த பாடசாலை மாணவர்கள் பாடசாலை சீருடைகளுடன் பாடசாலை கொடிகளை அசைத்தவாறு வீதிகளில் மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபடுவார்கள். வர்த்தக நிலையங்களுக்கு சென்று பண சேகரிப்பிலும் மாணவர்கள் ஈடுபடுவதாகவும் குற்றசாட்டுக்கள் முன்வைக்கப்படுவதும் உண்டு.

அதேவேளை தமது சகோதர பாடசாலைகளான பெண்கள் பாடசாலைகள் முன்பாகவும் கொண்டாட்டங்களில் ஈடுபடுவார்கள். பாடசாலை நேரங்களில் பாடசாலையை விட்டு சீருடையுடன் வெளியேறும் மாணவர்கள் வீதிகளில் இவ்வாறான கொண்டாடங்களில் ஈடுபட்டு வருவது தொடர்பில் வருடாவருடம் பாடசாலை அதிபர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் நிலையிலும் அது தொடர்பில் இறுக்கமான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது பாடசாலை அதிபர்கள் திணறி வருவது குறிப்பிடத்தகது

Related Posts