Ad Widget

யாழ். பிரதேச செயலரை கைதுசெய்வேன்: சமன் சிகேரா

arrest_1யாழ். பிரதேச செயலரை விரைவில் கைதுசெய்யவுள்ளதாக யாழ்.தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி சமன் சிகேரா கடந்த வியாழக்கிழமை தெரிவித்தார்.

யாழ். மணிக்கூட்டு கோபுர திறப்பு விழாவில் கலந்துகொண்ட அவர் ஊடகவியலாளர்களுடன் சிறிது நேரம் உரையாடிய போதே இதனைத் தெரிவித்தார்.

யாழ். நீதிமன்றிற்கு அருகாமையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக இரு ஜோடிகளை யாழ். பிரதேச செயலர் சுகுணரதி தெய்வேந்திரம் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் நிஷாந்தன் ஆகியோர் கடந்த ஒரிரு தினங்களுக்கு முன்னர் கையும் களவுமாக பிடித்தனர். அவர்கள் ஹோட்டலுக்கு சென்றபோது ஊடகவியலாளர்களும் உடன் சென்று புகைப்படங்களை எடுத்துக்கொண்டதுடன் வீடியோவும் எடுத்துக்கொண்டுள்ளனர்.

தனது ஹோட்டலுக்குள் பிரதேச செயலர் சுகுணரதி தெய்வேந்திரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் நிஷாந்தன் மற்றும் ஊடகவியலாளர்கள் அத்துமீறி நுழைந்ததாக ஹோட்டல் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டின் பிரகாரம், ஹோட்டலிற்குள் அத்துமீறி நுழைந்தது சட்டத்திற்கு முரணான செயல் என அவர் சுட்டிக் காட்டினார்.

இவ்வாறு விபச்சாரம் நடைபெறுகின்றது என்று உறுதியாக தெரிந்திருந்தால் அதுதொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருக்கலாம் என்றும் முறைப்பாடு பதிவு செய்யாது, அத்துமீறி நுழைந்தது குற்றமென்றும் அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவத்திற்கு சென்ற ஊடகவியலாளர்கள் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்க முடியாதென்றும், ஊடகவியலாளர்களை யாழ். பிரதேச செயலாளரே அழைத்து சென்றுள்ளார் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

யாழ். பிரதேச செயலரை கைதுசெய்வது தொடர்பாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபருடன் கலந்துரையாடியுள்ளதாகவும், விரைவில் கைதுசெய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென்றும், இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினரையும் கைதுசெய்யவுள்ளதாகவும் அவர் கூறினார்.

Related Posts