Ad Widget

யாழ்.பல்கலை மாணவர் மீதான வாள்வெட்டு : மேலும் ஒருவர் கைது : பின்னணியில் இராணுவம் ?

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வாள்வெட்டுக்கு இலக்காகிய சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் 12 ஆவது சந்தேக நபர் ஒருவர் நேற்று மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வாள்வெட்டுக்கு இலக்காகினர். அவர்களில் ஒருவர் மிகவும் ஆபத்தான நிலையில் கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 11 பேர் எற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர்.

எனினும் 12 ஆவது சந்தேக நபராக மானிப்பாயை சேர்ந்த ராஜ்குமார் கபில்ராஜ் (வயது 24) என்பவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்படும் போது அவரிடமிருந்து வாள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாகவும் மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்

மேலும் தெரிவிக்கையில்,

பல்கலைக்கழக மாணவர்கள் வாள்வெட்டுக்கு இலக்காகிய சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் 11 பேர் எற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் தொடர்புடைய மேலும் பலரை தேடி வருகின்றோம். அந்தநிலையில் நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் நடாத்திய விசாரணையில் குறித்த நபர் இராணுவத்துடன் தொடர்புடையவர் என்ற உண்மை வெளியாகியுள்ளது.

கடந்த காலங்களில் காங்கேசன்துறையில் இராணுவ வீரராக இணைந்து செயற்பட்டிருந்ததாகவும் தற்போது இராணுவத்தில் இல்லை என்றும் விசாரணையில் குறித்த நபர் கூறியுள்ளார்.

மேலும் அவரது கைத்தொலைபேசி குறித்தும் விசாரணை நடாத்தப்பட்டது. அதில் திருட்டுக்கும்பலுடன் தொடர்புடைய பலரது தொலைபேசி அழைப்புக்களும் இருந்தன. குறித்த நபரின் வாக்குமூலத்தை தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

சந்தேகநபருடன் தொடர்புடைய திருட்டு கும்பல் ஒன்றையும் இன்று கைது செய்துள்ளோம். குறித்த நபர் இன்றையதினம் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts