Ad Widget

யாழ். பல்கலை ஊழியர் நியமனங்களை உயர்கல்வி அமைச்சு நிறுத்தவில்லை!

யாழ். பல்கலைக்கழகத்திற்கெனத் தெரிவு செய்யப்பட்ட கல்விசாரா ஊழியர்கள் 39 பேரின் நியமனங்களை நிறுத்தி வைக்குமாறு உயர் கல்வி அமைச்சு ஒருபோதும் அறிவிக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார் அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன.

கணினி பிரயோக உதவியாளர்கள், சுருக்கெழுத்தாளர்கள் எழுதுவினைஞர்கள் ஆகிய பதவிகளுக்காக நடத்தப்பட்ட எழுத்துப் பரீட்சை மற்றும் நேர்முகத் தேர்வுகள் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்களின் நியமனங்கள் இரண்டு மாதங்களாகியும் யாழ். பல்கலைக்கழக பேரவையால் அங்கீகரிக்கப்படாமல் இருப்பது குறித்துக் கேட்கப்பட்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.

24.04.2012 இல் கணினிப் பிரயோக உதவியாளர்களுக்கும், 25.04.2012 எழுதுநர் சேவைக்கும் தெரிவுப் பரீட்சை நடத்தப்பட்டது. கணினிப்பரயோக உதவியாளர்களுக்கான செய்முறைத்தேர்வு 17.05.2012 இல் நடாத்தப்பட்டது. விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் கே.கந்தசாமி மற்றும் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடாதிபதி த.வேல்நம்பி ஆகியோரடங்கிய தேர்வுக் குழு இறுதிப்பட்டியலைத் தயார் செய்தது. சுருக்கெழுத்தாளா பதவிக்கு 2 பேரையும், கணினிப்பரயோக உதவியாளர் பதவிக்கு 32 பேரையும், எழுதுநர் பதவிக்கு 7 பேரையும் இந்தக் குழு சிபார்சு செய்தது.

இந்த நேர்முகத் தேர்வைத் தொடர்ந்து 29.09.2012 அன்று வவுனியா வளாகத்தில் நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில் அந்தப் பட்டியல் அங்கீகாரத்துக்காக முன்வைக்கப்படவில்லை. அது தொடர்பில் கேட்கப்பட்டதற்கு உயர் கல்வி அமைச்சர் அதனை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டார் என்று பதிவாளர் பதிலளித்திருந்தார்.

கடந்த மாத இறுதியில் நடைபெற்ற பேரவைக் கூட்டத்தின் போதும்கூட நியமனப் பட்டியல் பேரவையின் அங்கீகாரத்துக்காக முன்நகர்த்தப்படவில்லை. அது பற்றிப் பீடாதிபதிகள் கேள்வி எழுப்பிய போதும், உயர் கல்வி அமைச்சர் மற்றும் அமைச்சர் டக்ளஸ் ஆகியோரின் அறிவுறுத்தல்கள் கிடைக்கப்பெற்றதான, தெளிவற்ற பதில் ஒன்றைப் பதிவாளர் வழங்கியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து எழுந்த காரசாரமான விவாதத்தை அடுத்து பீடாதிபதிகள் பேரவைக் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்திருந்தனர். “உயர் கல்வி அமைச்சரோ அமைச்சோ எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நியமனங்களை இடைநிறுத்தி வைக்குமாறு அறிவிக்கவில்லை.

இது தொடர்பான மேலதிக விவரங்களை யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம்தான் கேட்க வேண்டும்” என்று தெரிவித்தார் அமைச்சின் செயலாளர் சுனில் ஜயந்த நவரத்தின.

Related Posts