Ad Widget

யாழ்.பல்கலையில் க.பொ.த. உயர்தரத்தில் ஆங்கில பாடத்தை தெரிவு செய்யும் மாணவர்களுக்கு விழிப்பூட்டல் கருத்தமர்வு

கல்விப் பொதுத்தராதர உயர்தர ஆங்கில பாடம் (பாட இலக்கம்: 73) தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வரும் 10ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் ஆங்கிலத் துறைத் தலைவர் சுவாமிநாதன் விமல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் பிரதான பாடங்களில் ஒன்றாக மாணவர்கள் தெரிவு செய்யக்கூடிய ஆங்கில பாடம் (பாட இலக்கம்: 73) (ஆங்கில இலக்கியம் என்றும் சொல்லப்படும் பாடம் பொது ஆங்கிலம் அல்ல) தொடர்பாக வடமாகாணத்திலே கல்வி பயிலும் மாணவர்கள் மத்தியிலே விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையிலான கருத்தரங்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் ஆங்கிலத்துறையினர் ஏற்பாடு செய்திருக்கின்றனர்.

இந்தக் கருத்தரங்கு எதிர்வரும் 10ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை யாழ்ப் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கிலே இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2021, 2022, 2023 ஆகிய வருடங்களிலே இடம்பெறவிருக்கும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளிலே ஆங்கில பாடத்த்துக்கு (பொது ஆங்கிலம் அல்ல) தோற்றவிருக்கும் மாணவர்கள், தற்போது தரம் 10 மற்றும் தரம் 11இலே கல்வி பயிலும், எதிர்காலத்திலே உயர்தரத்தில் ஆங்கிலப் பாடத்தினைத் தமது பிரதான பாடங்களிலே ஒன்றாகத் தெரிவு செய்ய விரும்பும் மாணவர்கள் அல்லது இந்தப் பாடம் தொடர்பாக மேலும் அறிந்துகொள்ள விரும்பும் மாணவர்கள், உயர்தர வகுப்பு ஆங்கிலப் பாடத்திலே ஆர்வமாக இருக்கும் ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர் போன்றோர் இந்தக் கருத்தரங்கிலே பங்கேற்க முடியும்.

தற்போது தரம் 12 மற்றும் தரம் 13 இல் ஆங்கிலத்தினை (பாடஇலக்கம்: 73) பிரதான பாடங்களிலே ஒன்றாகக் கற்கும் மாணவர்களுக்கு எவ்வாறான வழிகளிலே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் ஆங்கிலத்துறையினர் கல்விசார் ரீதியில் உதவி வருகின்றனர் என்பது பற்றி இங்கு விளக்கமளிக்கப்படும்.

அத்துடன் மேலும் எவ்வாறான வழிகளிலே இந்த உதவியினை மொழியியல் ஆங்கிலத்துறையினர் மேம்படுத்தலாம் அல்லது விரிவுபடுத்தலாம் என்பது பற்றியும் இந்தக் கருத்தரங்கிலே ஆராயப்படும்.

மாகாணக் கல்வித் திணைக்களத்தின் ஆங்கிலத்துக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் கற்பிக்கும் ஆசிரியர்கள், தற்போது ஆங்கிலத்தினை உயர்தரத்திலே கற்கும் மாணவர்கள் இந்தக் கருத்தரங்கிலே வளவாளர்களாகச் செயற்படுவர்.

இந்த நிகழ்விலே பங்குபற்றும்படி ஆர்வமுள்ள பாடசாலை மாணவர்களையும், ஆசிரியர்களையும், பெற்றோரினையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் ஆங்கிலத்துறையினர் அழைக்கின்றனர்.

கருத்தரங்கின் தொடக்கம் முதல் முடிவு வரை சமூக இடைவெளி பேணப்படும். பங்குபற்றுபவர்கள் முகக்கவசங்களை அணியுமாறு கேட்கப்படுகின்றனர் – என்றுள்ளது.

Related Posts