Ad Widget

யாழ். பல்கலையின் வெளிவாரி பேரவை உறுப்பினர்கள் வெளியேறாவிட்டால் பாரிய போராட்டம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளிவாரி பேரவை உறுப்பினர்கள் 14 பேரும் தாமாக வெளியேற வேண்டும். அவர்களை தொழிற்சங்க உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அவர்கள் தாமாக வெளியேறாவிடின் யாழ். பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள் பாரிய தொழிற்சங்க போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும் என யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்க உப தலைவர் சி.கலாராஜ் செவ்வாய்க்கிழமை (20) தெரிவித்தார்.

பல்கலைக்கழக வெளிவாரி பேரவை உறுப்பினர்கள் அரசியல் செல்வாக்குடன் ஒரு கட்சியை சார்ந்தவர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் சங்கத்தால் பலமுறை குற்றஞ்சாட்டப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் அவரிடம் தொடர்புகொண்டு கேட்டபொழுதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து கூறுகையில், ‘வெளிவாரி உறுப்பினர்கள் வெளியேறுவதற்கு, துணைவேந்தர் வசந்தி அரசரட்ணமும், பீடங்களின் பீடாதிபதிகளும் வலியுறுத்த வேண்டும். அவ்வாறு நடைபெறாவிட்டால் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தரிடம் பல்கலை நிர்வாகத்தை கையளிப்பதற்கு ஆதரவளிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

வெளிவாரி உறுப்பினர்களின் முறைகேடான செயற்பாடுகள் தொடர்பாக நாம் முன்னாள் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸநாயக்கவிடம் கூறியபோது, ‘நீங்கள் எல்லோரும் புலிகள், முன்னாள் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா சொல்வதைத் தான் நாங்கள் செய்வோம்’ என அவர் பதிலளித்தார்.

‘உயர்கல்வி அமைச்சில் பதிவு செய்யப்பட்டு, பரீட்சை நடத்தியே வெளிவாரி உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும். ஆனால், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மட்டும் அவ்வாறு நடைமுறை இருக்கவில்லை. டக்ளஸ் தேவானந்தாவின் சிபாரிடன் வருபவர்களுக்கு வெளிவாரி உறுப்பினர்கள் பதவி வழங்கப்படும் என உயர்கல்வி அமைச்சால் கூறப்பட்டது. வெளிவாரிகள் உறுப்பினர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மிக மோசமான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

உறுப்பினர்களாக இணைபவர்களின் கல்விச் சான்றிதழ் 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் பரிசோதிக்கப்பட்டு வந்தது. எனினும் 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் அது நடைமுறைப்படுத்தத் தேவையில்லையென பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்திருந்தார்.

வெளிவாரி உறுப்பினர்களின் மோசமான நடவடிக்கை, சட்டமீறல்களுக்கு உள்வாரி உறுப்பினர்கள் சிலர் பங்குதாரர்களாக இருந்துள்ளனர். ஒரு சிலர் எதிர்த்துள்ளார்கள். ஏனையவர்களுக்கு அச்சுறுத்தல் இருந்திருக்க வாய்ப்புகள் உண்டு.

பேரவை வெளிவாரி உறுப்பினர்கள் பல்கலைக்கழக பேரவையாக செயற்படவில்லை. மாறாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்களாக தான் செயற்பட்டனர். ஈ.பி.டி.பி அலுவலகத்தில் பேரவைக்கூட்டம் நடைபெற்று அங்கு எடுக்கப்படும் முடிவுகள் தான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தெரிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

பேரவையின் வெளிவாரி உறுப்பினர் மேற்கொண்ட சீர்கேடுகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்வதற்கு முறைகேடுகள் தொடர்பான தரவுகள் சேகரிக்கப்படுகின்றது. தற்போதுள்ள பேரவையை வைத்து விசாரணை செய்வது சாத்தியமற்றது. எதிர்வரும் 31ஆம் திகதி பல்கலைக்கழக பேரவை கூட்டம் இடம்பெறவுள்ளது. பேரவைக் கூட்டமை இடம்பெறுவதற்கு முன்னரே வெளிவாரி பேரவை உறுப்பினர்கள் தாமாகவே பதவி விலகவேண்டும்.

இவர்கள் தாமாக விலகாவிட்டால் போராட்டம் முன்னெடுக்கப்படும். வெளிவாரி உறுப்பினர்களுக்கு எதிரான போராட்டத்தால் பல்கலைக்கழக நிர்வாக மற்றும் செயற்பாட்டு நடவடிக்கை ஸ்தம்பிக்கும் எனத் தெரிவித்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவையில் 14 வெளிவாரி உறுப்பினர்களும் 13 உள்வாரி உறுப்பினர்களும் உள்ளனர். துணைவேந்தர், வவுனியா வளாக முதல்வர், 9 பீடங்களின் பீடாதிபதிகள், செனற் சேர்ந்த இருவர் ஆகியோர் உள்வாரி உறுப்பினர்களாக இருக்கின்றனர். வெளிவாரி உறுப்பினர்களே கட்சி சார்பானவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பேரவை உறுப்பினர்களின் வாக்குரிமையின் அடிப்படையிலேயே துணைவேந்தர் தெரிவு இடம்பெறுவதுடன், பட்டப்படிப்பு பீடங்களின் பீடாதிபதிகள், பல்கலைக்கழக பரீட்சைகளின் திகதிகள், பட்டமளிப்பு விழா திகதிகள், உபகுழுக்கள் தெரிவு என்பன மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts