Ad Widget

யாழ் பல்கலைக்கழக மோதல் ; விசாரணைக்குழு அமைக்க தீர்மானம்

யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பு தொடர்பாக விசாரணைக்குழு ஒன்றை அமைத்து விசாரைணை மேற்கொள்ள தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் வசந்தி அரியரட்ணம், பீடாதிபதிகள் மற்றும் மாணவத் தலைவர்களுக்கு இடையில் நேற்றை மோதல் தொடர்பாக விசேட கலந்துரையாடல் இன்று காலை பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

இதன்போது பல்கலைக்கழத்திற்கு முன்னால் மற்றும் மாணவர் விடுதிகளுக்கு முன்னால் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு பொலிஸாரை அகற்றிக் கொள்ளவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீட சிங்கள மற்றும் தமிழ் மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் தொடர்பாக விசாரணை ஆணைக்குழுவினை அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

மோதல்களின் போது சிங்கள மாணவர்களினால் அடித்து நெறுக்கப்பட்ட விஞ்ஞானபீட கட்டடத்தை கோப்பாய் பொலிஸார் பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு வழமையாக தமிழர் பாரம்பரிய முறையான மேள தாளத்துடன் இடம்பெறுகின்ற போதிலும், தமிழ் மாணவர்களால் மேளதாள கலைஞர்கள் அழைக்கப்பட்டிருந்த நிலையில் சிங்கள மாணவர்கள் தமது கண்டிய நடனக் கலைஞர்களை அழைத்துள்ளனர்.

சிங்கள மக்களின் பாரம்பரிய நடனமான கண்டிய நடனத்துடன் சிங்கள மாணவர்களை வரவேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நடவடிக்கையால் இரண்டு மாணவ குழுக்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் பின்னர் கைகலப்பாக மாறியது.

இதன்போது பொல்லுகள், தடிகள் சகிதம் சிங்கள மாணவர்களும், தமிழ் மாணவர்களும் மோதலில் ஈடுபட்டனர். இதன்போது சிங்கள மாணவர்களால் தமிழ் மாணவர்கள் மோசமாகத் தாக்கப்பட்டனர்.

இதனால் அச்சமடைந்த ஏனைய மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தை விடடு தப்பிச் சென்றனர். அதேவேளை சம்பவ இடத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களையும் மாணவர்கள் அச்சுறுத்தி விரட்டியடித்தனர்.

இந்த நிலையில் மாணவர்களுக்கிடையிலான மோதல் தீவிரமடைந்ததை அடுத்து அங்கு ஏராளமான பொலிசார் குவிக்கப்பட்டு நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

சிங்கள, தமிழ் மாணவர்களை தனித்தனியே பிரித்து வைத்து பொலிசார் மோதலை முடிவுக்கு கொண்டுவந்தனர்.

இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டதுடன், ஏராளமான பொலிசார் குவிக்கப்பட்டு நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த மோதலில் காயமடைந்த 14 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், பல்கலைக்கழக விடுதியிலிருந்து மாணவர்களை வெளியேறுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது

மோதல்களின் போது விஞ்ஞானபீட கட்டடமொன்றும் அடித்து நொருக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து விஞ்ஞான பீடத்தை காலவரையரையின்றி மூடுவதற்கு பேராசிரியர் வசந்தி அரியரத்னம் உத்தரவிட்டிருந்த நிலையில் பொரும்பாலான மாணவர்கள் மாணவர் விடுதிகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

 

Related Posts