யாழ்.பல்கலைகழக மோதல் சம்பவத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வரும் மாணவனின் முறைப்பாட்டின் பிரகாரம் தமிழ் மாணவர்கள் மூவரை கோப்பாய் பொலிசார் விசாரணைக்காக அழைத்துள்ளதாக நேற்றிரவு செய்திகள் வெளியாகியிருந்தன.
எனினும் நேற்றிரவு வரை எவரும் கைதுசெய்யப்பட்டாத அதேநேரம் எந்நேரமும் மாணவர்கள் சிலர் கைதுசெய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட தமிழ் மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக மாணவர்கள் மத்தியில் பரவிய தகவலால் நேற்றிரவு பரபரப்பு ஏற்பட்டது எனினும் பொலிஸார் தாம் எந்தவொரு மாணவனையும கைது செய்யவில்லை என பொலிஸார் நேற்றிரவு தெரிவித்தனர்.
எனினும் திருநெல்வேலியில் சக மாணவர்களுடன் தங்கியிருந்த விசாரணகக்கு அழைக்கப்பட்ட மாணவனை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சிலர் அழைத்துச் சென்றதாகவும் பின்னர் அவர் எங்கு சென்றார் எனத் தெரியவில்லை எனவும் மாணவர் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை மாணவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கும் நோக்கில் தாம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் நேற்றிரவு தினக்குரலுக்கு தெரிவித்தார். இதுதொடர்பில் சட்டம் ஒழுங்கு அமைச்சருடன் தான் பேசியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை மாணவர் ஒருவரை விசாரணைக்கு அழைக்கவுள்ளதாக பொலிஸார் தமக்கு கூறியதாக பல்கலைக்கழக வணிக பீட பீடாதிபதி வேல்நம்பி உறுதிப்படுத்தினார்.
எனினும் நேற்றிரவுவரை எந்தவொரு மாணவனும் பொலிஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படவோ அல்லது கைது செய்யப்படவோ இல்லை என்பதை தன்னால் உறுதிப்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.