யாழ் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் தொடர் போராட்டம்

யாழ் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள், இன்றைய தினம் (27) புதன்கிழமை பல்கலைக்கழக முன்றலில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Capture

இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் கல்வி சாரா ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்க்க கோரியும், சம்பள ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட சம்பள உயர்வுகளை நடைமுறைப்படுத்தக் கோரியும் இப்போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்துள்ளனர்.

இன்று காலை யாழ். பல்கலைக்கழக முன்றலில் கூடிய கல்வி சாரா ஊழியர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இல்லாவிடின் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தலைவர் சி.தங்கராசா கருத்து தெரிவிக்கையில்,

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று முதல் தொடர்ச்சியான தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், இப்போராட்டத்தில் யாழ் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களும் இணைந்து கொண்டுள்ளதாகவும் கூறினார்.

இந்த வருடம் பெப்ரவரி மாதம் 29 ஆம் திகதி, உயர் கல்வி அமைச்சின் செயலாளருக்கும் பல்கலைக்கழக தொழிற்சங்கக் கூட்டுக் குழுவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட கூட்டு உடன்படிக்கையை அமுல்படுத்தத் தவறியதைக் கண்டித்தும் 25 வீத சம்பள உயர்வை வழங்கும் படியும் இத்தொழிற்சங்கப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

தொடர்ந்து கடந்த 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தோம். ஆனால் தீர்க்கமான முடிவு இதுவரை கிடைக்காத காரணத்தினால் இன்றிலிருந்து தொடர்ச்சியான வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளோம்.

இதற்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும். இதன் காரணமாக மாணவர்கள் பாதிக்கப்படுவதை நாம் விரும்பவில்லை என தனது கருத்தில் கூறினார்.

Related Posts