Ad Widget

யாழ். நகரிலுள்ள இறைச்சிக்கடைகள் பூட்டு

யாழ். மாநகர சபைக்குட்பட்ட நாவாந்துறை, பண்ணை ஆகிய பகுதியில் அமைந்துள்ள இறைச்சிக்கடையின் உரிமையாளர்கள் செவ்வாய்க்கிழமை (17) தமது கடைகளை பூட்டி ஆடு, மாடுகள் கொண்டு செல்வதற்கான அனுமதிப்பத்திரத்தை தருமாறு மாநகரசபை ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதனிடம் மகஜர் கையளித்துள்ளனர்.

யாழ்.மாநகர சபையின் கேள்வி அறிவித்தல் மூலம் கடைகளை குத்தகைக்கு எடுத்த இறைச்சிக் கடைக்காரர்கள், பண்ணையிலுள்ள கொல்கலனுக்கு ஆடு, மாடுகளை கொண்டு வந்து வெட்டுகின்றனர்.

இவ்வாறு கொண்டு வரும் ஆடு, மாடுகளுக்கான வழி அனுமதிப்பத்திரத்தை பொலிஸார் கேட்கின்றனர். அவ்வாறு வழி அனுமதிப்பத்திரம் இல்லாதுவிடின் வழக்குத் தாக்கல் செய்து, நீதிமன்றத்தால் அபராதம் விதிக்கப்படுகின்றது.

இவ்வாறனதொரு அனுமதிப்பத்திரம் மாநகர சபை வழங்காமையால், தாங்கள் இந்தச் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாகவும், இதனை நிவர்த்தி செய்ய மாநகர சபை நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரி கடைகள் பூட்டி, மகஜர் கையளித்தனர்.

உரிய பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடி ஒரு வாரத்தில் முடிவு சொல்வதாக மாநகர ஆணையாளர் தெரிவித்தார்.

Related Posts