Ad Widget

யாழ்.தொழில் நுட்பக் கல்லூரி வளாகத்தில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியில் அநாமதேய வார்த்தைகள்

யாழ்.தொழில் நுட்பக் கல்லூரியில் நீண்ட காலமாக நிலவும் பல்வேறு குறைபாடுகளுக்குத் தீர்வு காண வலியுறுத்தி மூன்றாவது வாரமாக மாணவர்களின் வகுப்புப் பகிஸ்கரிப்புப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக ஊடகங்களில் தொடர்ந்தும் செய்திகள் வெளியாகி வரும் நிலையில் நேற்றய தினம் மதிய வேளையில் கல்லூரியின் வளாகத்தில் அநாமதேய சுவரொட்டியோன்று ஒட்டப்பட்டிருந்தது.

சுவரொட்டியில் ‘புறா எச்சமும் அதற்கான தீர்வும்’ எனத் தலைப்பிடப்பட்டிருந்தது.

அந்தச் சுவரொட்டியின் தலைப்பின் கீழ் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்கள் நாகரிகமற்ற, ஜீரணிக்க முடியாத வார்த்தைகளாக இருந்தது.

அதில் குறிப்பிடப்பட்டிருந்த சில விடயங்கள் ( ஏனையவை பிரசுரிக்க முடியாதவை என்பது குறிப்பிடத்தக்கது)

ஊடகங்களில் பெருமை தேடி அலையும் ஆசிரியர்களுக்கும், அவர்களுக்கு வால் பிடித்துத் திரியும் மாணவர்களுக்கும்… அப்பாவி மாணவர்களைக் கல்வி கற்க விடாமல் வீணாகப் போராட்டம் என்று நடாத்திப் பொன்னான நேரங்களை வீணாக்காது அந்த நேரத்தில் போராட்டத்தை நடாத்திய ஆசிரியர்களும் அவர்களுடன் இணைந்த மாணவர்களும் ஒவ்வொரு மாணவர்களும் ஒவ்வொரு புறாக்களாகப் பிடித்து அதன்…… பொச்சை அடையலாம் தானே என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான சுவரொட்டி ஓட்டப்பட்டிருந்தமை தொடர்பாகக் கடும் விசனம் தெரிவித்துள்ள கல்லூரியின் மாணவர்களும், விரிவுரையாளர்களும் கடந்த பல நாட்களாகக் கல்லூரிக்கு வருகை தருவதைத் தவிர்த்து வந்த பணிப்பாளர் நேற்றய தினம் கல்லூரிக்கு வருகை தந்த நிலையில் அவரும், அவருடைய சகாக்களுமே குறித்த அநாமதேயச் சுவரொட்டியைத் தயாரித்து ஓட்டியிருக்கலாம் எனச் சந்தேகிப்பதாகவும் தெரிவித்தனர்.

எதிர்வரும் நாட்களில் தாம் பல்வேறு சேறு பூசும் நடவடிக்கைகளுக்கும்,அச்சுறுத்தல்களுக்கும் ஆளாகலாமென எதிர்வு கூறியுள்ள அவர்கள் தீர்வு கிடைக்கும் வரை போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாகவும் உறுதிபடத் தெரிவித்தனர்.

இதேவேளை மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் விடுத்த கோரிக்கைக்கமைய நேற்று 27 ஆம் திகதி திங்கட்கிழமை கொழும்பிலிருந்து வருகை தந்த தொழில் நுட்பக் கல்வி பயிற்சித் திணைக்களத்தின் 7 பேர் கொண்ட உயரதிகாரிகள் கல்லூரியில் நிலவும் பல்வேறு குறைபாடுகள் தொடர்பில் ஆராய்ந்ததோடு இது தொடர்பில் கல்லூரியின் மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்களுடன் வெவ்வேறாகவும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

கலந்துரையாடலின் போது ஆராயப்பட்ட விடயங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த கல்லூரியின் மாணவர் மன்றத் தலைவர்,

இன்றைய தினம் கொழும்பிலிருந்து வருகை தந்த தொழில் நுட்பக் கல்லூரியின் பயிற்சித் திணைக்கள மேலதிகாரிகளினால் ஒவ்வொரு பாட நெறியிலிருந்தும் மாணவர்களை அழைத்து அவர்களுடன் கலந்துரையாடினர். இதன்போது அனைத்து மாணவர்களாலும் கல்லூரியில் நிலவும் குறைபாடுகள் தொடர்பிலான விளக்கம் அளிக்கப்பட்டது.அதனையடுத்து அவர்கள் சில நடவடிக்கைகள் எடுப்பதாகக் கூறினர்.

கொரிய அரசாங்கத்தினால் நிர்மாணித்து வழங்கப்பட்ட கட்டத்தில் புறாக்களின் எச்சங்கள், கழிவுகள் அதிகளவில் காணப்படுகின்றமையால் அது சுத்திகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவை சுத்தம் செய்ய ஆரம்பித்து இரண்டு வாரங்கள் கடந்து விட்டது. அவர்கள் இன்னும் 2 வாரங்கள் செல்லும் எனக் கூறியுள்ளனர். இந்த நிலையில் இன்னும் 18 வாரங்களில் பரீட்சையை எதிர்நோக்க வேண்டிய கட்டாயத்தில் மாணவர்கள் உள்ளனர். கல்வி கற்பதற்கான சூழல் இன்னமும் ஏற்படுத்தித் தரப்படவில்லை,பயிற்சி வகுப்புக்கள் எதுவும் நடத்தப்படவில்லை எனவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

இந்நிலையில் கட்டடம் திருத்தித் தரப்படும் என இன்று வருகை தந்த உயரதிகாரிகளால் கூறப்பட்ட போதும் மாணவர்களால் எவ்வளவு காலத்தில் திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனக் கேட்ட போது அதற்கு அவர்கள் சரியான பதில் எதனையும் அளிக்கவில்லை.

எனவே,மாணவர்களாகிய எங்களால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு விரைவாக தீர்வு பெற்றுத் தரப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்ள விரும்புகிறோம். என்றார்.

Related Posts