Ad Widget

யாழ்.தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்.தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தமது கல்லூரியில் நிலவி வருகின்ற ஒழுங்கீனங்களையும் பிரச்சினைகளையும் உடனடியாக சீர் செய்ய வேண்டும் என கோரி கல்லூரி வளாகத்தில் நேற்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

யாழ். தொழில்நுட்பக் கல்லூரியில் சுகாதார குறைபாடுகள் காணப்படுகின்றன என கல்லூரி விரிவுரையாளர்களாலும் மாணவர்களாலும் கல்லூரி நிர்வாகத்திற்கு பலமுறை தெரியப்படுத்தி வந்ததாகவும் இது வரை காலமும் அக்குறைபாடுகள் தொடர்பாக எந்த நடவடிக்கையும் மேற் கொள்ளப்படவில்லை என்பதால் நேற்றைய தினம் மாணவர்களும் விரிவுரையாளர்களும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் போது யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபர் பி.செந்தில்நந்தனன் மற்றும் உதவி அரச அதிபர் சுதர்சன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வருகை தந்து கல்லூரியின் குறைபாடுகளை நேரில் சென்று பார்வையிட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கல்லூரியில் நிலவுகின்ற பிரச்சினைகள் தொடர்பாக 10 கோரிக்கைகளை உள்ளடக்கிய மகஜர் ஒன்றினை மேலதிக அரச அதிபரிடம் கையளித்திருந்தனர்.

அத்துடன் கல்வி நடவடிக்கைகளை சீராக மேற்கொள்வதற்கும் மாணவர்களினதும் விரிவுரையாளர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குமான நடவடிக்கைகளை மிக விரைவாக மேற்கொள்ள வேண்டும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளருக்கும் வடமாகாண முதலமைச்சருக்கும் மகஜர் ஒன்றினை அனுப்பியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக யாழ். தொழில்நுட்ப கல்லூரி பணிப்பாளர் என். யோகரா ஜனை தொடர்பு கொண்டு கேட்ட போது,கடந்த காலத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் கல்லூரியின் ஒழுங்குமுறைகளையும் பிரச்சினைகளையும் முற்று முழுதாக தீர்க்க முடியவில்லை.

ஒரு மாத காலத்துக்குள் மாணவர்களுடைய கோரிக்கைகள் நிறை வேற்றிக் கொடுக்கப்படும். அரசியல் தலையீடுகளால் சிலர் குழப்பங்களை விளைவிக்க முயல்கின்றனர் என்றும் மாணவர்கள் குழப்பங்களை விளைவிக்காமல் இருக்கும் பட்சத்தில் விரைவாக கல்லூரியின் திருத்த வேலைகளையும் சுகாதார தேவைகளையும் நிறைவு செய்ய முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts