Ad Widget

யாழ்.தாக்குதல் சம்பவத்திற்கும் யாழ். படைத்தளபதிக்கும் தொடர்பு!- ரணில்

வலிகாமம் வடக்கில் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தின் போது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துக்கும் யாழ். கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவுக்கும் தொடர்பு இருப்பதாக நான் நினைக்கின்றேன்’ என்று எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, இன்று யாழ். விருந்தினர் விடுதியில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சியினராகிய நாம் யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் பயணத்தினை மேற்கொண்டு நேற்றைய தினம் பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காக பொதுமக்களின் காணிகளைச் சுவீகரிப்பதனை எதிர்த்து பொதுமக்களினால் ஏற்பாடு செய்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்ட பின் அந்த நிகழ்வினைக் குழப்பும் நடவடிக்கையில் இருவர் ஈடுபட்டுள்ளனர்.

அவரில் ஒருவரை மக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகவும், ஒருவர் தப்பிச் சென்றுவிட்டதாகவும் நான் அறிந்தேன். உண்மையில் இவர்களை பொலிஸாரே கைது செய்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதைச் செய்யத் தவிறிவிட்டனர்’ என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த விடயம் தொடர்பாக யாழ். கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்கவிற்கு தெரியும். அவர் இராணுவத்தினை மட்டுமல்லாது, அதற்கு அப்பாற்பட்டு ஆயுதக் குழுக்களையும் செயற்படுத்தி வருகின்றார் என்று நான் சந்தேகிக்கின்றேன். அவ்வாறு இல்லாவிடின் யாழ். கட்டளைத் தளபதி எனக்கு இவ்விடயம் தொடர்பாக எழுத்து மூலமாகத் தெரியப்படுத்த வேண்டும்.

ஏனெனில் நான் அங்கு உரையாற்றிவிட்டுச் செல்லுகையில் நிகழ்வு நடந்த வாயிலில் 8865 இலக்கமுடைய ஒரு இராணுவ கனரக வாகனம் ஒன்று தரிக்கப்பட்டிருந்ததை நான் அவதானித்தேன். அதில் சீருடையின்றி சிலர் நின்றதை அவதானித்தேன். அங்கு நின்றவர்கள் கஜபாகு றெஜிமெண்டின் 16வது படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள். இது பற்றி யாரும் எமக்கு சொல்லவேண்டிய தேவையில்லை.

தாக்குதல் நடத்தியவர்களின் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளது நான் கொழும்பு சென்றவுடன் இவர்கள் யார் அவர்களின் குடும்பங்கள் பற்றிய விபரங்களை வெளியிடவுள்ளேன்.

இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தொடர்பான விபரங்கள் எனக்கு ஒரு பொழுதினில் கிடைக்கப் பெற்றுவிட்டது.இந்த விபரத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோ அல்லது யாழ்ப்பாணத்தில் இருந்தோ எவரும் தரவில்லை.எனக்கு கொழும்பில் இருந்து இவைகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று ரணில் விக்கிரமசிங்க மேலும் அவர் தெரிவித்தார்.

Related Posts