Ad Widget

யாழ். – கொழும்பு தனியார் பேருந்து மீது கல்வீச்சுத் தாக்குதல்! பயணிகள் பாதிப்பு

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து மீது புத்தளத்திற்கும் அனுராதபுரத்திற்கும் இடையில் இனந்தெரியாத நபர்கள் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதனால் பேருந்தின் ஒரு பக்கக் கண்ணாடி உடைந்து சேதமாகியுள்ளது.இச்சம்பவம் நேற்று முன்நாள் திங்கட்கிழமை நள்ளிரவு 1.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தெய்வாதீனமாக பயணிகள் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

இச்சம்பவம் தொடர்பாக பேருந்தின் சாரதி தொலைபேசியில் பொலிஸாருக்கு தகவல் அறிவித்ததைத் தொடர்ந்து ஸ்தலத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு சம்பவ இடத்திற்கு அருகாமையிலுள்ள தேநீர்க் கடையொன்றில் வேலை செய்யும் இளைஞர் ஒருவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக தெரியவருவதாவது:

கொழும்பிலிருந்து பயணிகளுடன் யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று புத்தளத்தைத் தாண்டி சென்று கொண்டிருக்கும் போது கல்வீச்சுக்கு இலக்காகியது. சாரதியை இலக்கு வைத்து வீசப்பட்ட கல் சாரதிக்குப் பின்புறமாக வந்து வலது பக்கமாக உள்ள கண்ணாடியைத் தாக்கியதில் கண்ணாடி உடைந்து நொருங்கிய போதிலும் பயணிகள் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

சம்பவ இடத்தில் பேருந்தை நிறுத்திய சாரதி பொலிஸாருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து அரை மணி நேரத்திற்குள் ஸ்தலத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். இதைரயடுத்து பேருந்து யாழ்ப்பாணத்திற்கான தனது பயணத்தை தொடர்ந்தது.

இந்த பேருந்திற்கு சற்று முன் சென்று கொண்டிருந்த மற்றுமொரு பயணிகள் பேருந்துக்கும் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போதிலும் பயணிகளுக்கோ பேருந்துக்கோ எதுவித சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி தேநீர்க் கடையில் பேருந்தை நிறுத்துமாறு ஏற்கனவே அறிவித்திருந்த போதிலும் அவ்விடத்தில் பேருந்துகள் நிறுத்தப்படாமையே கல்வீச்சுத் தாக்குதலுக்கான காரணம் என விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

Related Posts