Ad Widget

யாழ்.இந்து மாணவன் வெட்டு காயத்துடன் மீட்பு!

யாழ்.இந்து கல்லூரி மாணவன் ஒருவர் கல்லூரிக்கு அருகில் உள்ள ஆட்களற்ற வீடொன்றில் இருந்து கை மணிக்கட்டில் வெட்டுக்காயத்துடன் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

கச்சேரி நல்லூர் வீதியை சேர்ந்த 14 வயது மாணவனே அவ்வாறு மீட்கப்பட்டு உள்ளான்.

மாணவன் மீட்கப்பட்ட வீட்டு கிணற்றில் இருந்து மாணவனின் பாடசாலை பை (bag) மீட்கப்பட்டு உள்ளது. அத்துடன் வீட்டு வளவில் இருந்து சோடா போத்தல், மாணவனின் கழுத்து பட்டி , இரத்த கறையுடன் பிளேட் ஒன்று என்பன மீட்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பில் அயலவர் தெரிவிக்கையில்,

வீடு சில காலமாக ஆட்கள் அற்று பூட்டி உள்ளது. இந்த வழியாக செல்லும் போது வீட்டு முற்றத்தில் பாடசாலை சீருடையுடன் மாணவன் ஒருவர் வீழ்ந்து கிடந்ததை அவதானித்து பார்த்த போது கையில் இருந்து இரத்தம் வடிந்தொடிய நிலையில் மாணவன் கிடந்தான்.

அதனை அடுத்து உடனடியாக பொலிசாருக்கும் பாடசாலைக்கும் தகவல் வழங்கியதும் விரைந்து வந்த பொலிசார் மாணவனை மீட்டு வைத்திய சாலைக்கு கொண்டு சென்றனர் என தெரிவித்தார்.

மாணவனின் பெற்றோர் தெரிவிக்கையில்,

”எமது மகன் தினமும் பாடசாலை சென்று வருகின்றார். இன்றைய தினமும் வழமை போன்று பாடசாலைக்கு சென்ற போது தன்னை இனம் தெரியாத மூவர் கையையும் கட்டி கடத்தி கொண்டு போய் அந்த வீட்டினுள் போட்டதாக கூறினார்.

வீட்டு கேற் பூட்டி இருந்ததால் மதிலால் தன்னை வீட்டு வளவுக்குள் தூக்கி போட்டு வீட்டுக்குள் வைத்து தன்னை அடித்ததாகவும் தனக்கு ஊசி ஒன்றினை போட்டதாகவும், சோடா குடிக்க தந்ததாகவும், அதன் பின்னர் தனது கையை பிளேட்டினால் வெட்டினதாகவும் எம்மிடம் கூறியுள்ளார்.

தொடர்ந்து வைத்தியர்கள் சிகிச்சை அளித்து வருவதனால் எம்மால் தொடர்ந்து மகனோடு கதைக்க முடியவில்லை ”என தெரிவித்தார்கள்.

பாடசாலை அதிபர் தெரிவிக்கையில்,

”குறித்த மாணவன் பாடசாலைக்கு ஒழுங்காக சமூகமளிப்பதில்லை. தற்போது நடைபெறும் மூன்றாம் தவணை காலத்தில் கடந்த திங்கள் செவ்வாய் கிழமை மட்டுமே பாடசாலைக்கு வருகை தந்துள்ளான். அதன் பின்னர் பாடசாலைக்கு வரவில்லை”. என தெரிவித்தார்.

பாடசாலைக்கு இவ்வாறு நீண்ட நாட்களாக சமூகமளிக்கவில்லை என்பதனை மாணவனின் பெற்றோருக்கு தெரியப்படுத்தவில்லையா ? என கேட்ட போது அதனை வகுப்பாசிரியர் அறிவித்து இருப்பார். அதனை நீங்கள் வகுப்பாசிரியரிடம் தான் வினாவ வேண்டும் என தெரிவித்தார். அப்படியாயின் வகுப்பாசிரியரை அழைத்து அதிபர் நீங்கள் தான் கேட்டு சொல்ல வேண்டும் என கூறிய போது சில நிமிட தயக்கத்திற்கு பின்னர் வகுப்பாசிரியரை அழைத்தார்.

வகுப்பாசிரியர் தெரிவிக்கையில்,

”மாணவன் எனது வகுப்பில் (9C) தான் கல்வி கற்கின்றார். மாணவன் பாடசாலைக்கு ஒழுங்காக சமூகம் அளிக்காதவர். அத்துடன் மாணவன் இருதய நோயாளி என்பதனால் அவனை நாம் பெரியளவில் கண்டிப்பதில்லை. இரண்டாம் தவணை பரீட்சை எழுதி முடித்த பின்னர் பாடசாலைக்கு சமூகம் அளிக்கவில்லை. மாணவர் மதிப்பீட்டு அட்டையை கூட பெறவில்லை.

பின்னர் கடந்த திங்கள் கிழமை தான் பாடசாலைக்கு வந்தான். அவனை வகுப்பில் இருந்து ஒழுக்காற்று ஆசிரியரிடம் அனுப்பி வைத்தேன். அவர் நாளை (செவ்வாய்க்கிழமை) பெற்றோரை அழைத்து வருமாறு கூறி வகுப்பில் இருக்க அனுமதித்தார்.

மறுநாள் பெற்றோரை அழைத்து வராமல் வந்து இருந்தான். பெற்றோர் எங்கே என கேட்ட போது 2 மணிக்கு வருவார்கள் என கூறினான்.

அதன் பின்னர் பாடசாலைக்கு வரவில்லை. நேற்றைய தினம் வகுப்பில் படிக்கும் சக மாணவன் ஒருவன் இந்த மாணவனை யாழ்.இந்துக்கல்லூரிக்கு அருகில் பாடசாலை சீருடையுடன் கண்டதாக தெரிவித்தான் என வகுப்பாசிரியர் தெரிவித்தார்.

மாணவன் பாடசாலைக்கு ஒழுங்கில்லை என்ற விடயத்தை மாணவனின் பெற்றோருக்கு தெரியப்படுத்தினீர்களா ? என கேட்ட போது,

முன்னர் ஒரு தடவை மாணவன் தனது அப்பாவின் தொலைபேசி இலக்கம் என ஒன்றை தந்து இருந்தான் அதற்கு தொடர்பினை ஏற்படுத்திய போது இலக்கம் தவறு என கூறியது வேறு இலக்கம் தெரியாது அதனால் பெற்றோருக்கு தெரியப்படுத்த முடியவில்லை என தெரிவித்தார்.

வித்தியாவின் சம்பவத்தினை அடுத்தும் யாழில் பாடசாலை மாணவர்களுக்கு மத்தியில், ஏற்பட்ட போதைவஸ்து பழக்கத்தினையும் அடுத்து வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் பாடசாலை நிர்வாகமும் மாணவர்களின் பெற்றோர்களும் தொடர்பில் இருக்க வேண்டும்.

மாணவர்கள் பாடசாலைக்கு சமூகம் அளிக்க முடியாது போனால் பெற்றோர்கள் தொலை பேசி ஊடாகவோ வேறு வழியின் ஊடாகவோ பாடசாலைக்கு தெரியப்படுத்த வேண்டும் அதேபோன்று மாணவர்கள் சமூகம் அளிக்கவில்லை என்றால் பெற்றோர்களுக்கு பாடசாலை நிர்வாகம் அறிவிக்க வேண்டும்.

இவ்வாறன ஒரு பொறிமுறை ஏற்படுத்தப்பட்டால் தான் மாணவர்களை பிற பாதிப்புக்களில் இருந்து பாதுக்காத்து கொள்ள முடியும் என்பதுடன் மாணவர்கள் குற்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்க முடியும் என தெரிவித்து இருந்தார்  என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவன் வெட்டுக்காயத்துடன் மீட்கப்பட்டது தொடர்பில் யாழ்.பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாடசாலைக்கு பெற்றோரை அழைத்து வருமாறு கூறியதனால் மாணவன் பயத்தின் காரணமாக பிளேட்டினால் தன்னுடைய கையினை வெட்டி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தானா ? எனும் கோணத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts