Ad Widget

யாழ் இந்து இன்னிஸ் தோல்வி!

சிவகுருநாதன் வெற்றிக்கிண்ணத்துக்காக நான்காவது ஆண்டாக நடைபெற்ற பெரும் துடுப்பாட்டப் போட்டியில் கொழும்பு ஆனந்தாக் கல்லூரி ஒரு இனிங்ஸ் மற்றும் 82 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் கொழும்பு ஆனந்தாக் கல்லூரி – யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணிகளுக்கிடையேயான இரண்டு நாள் போட்டியாக நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமான போட்டி யாரும் எதிர்பாரா வண்ணம் ஒரு நாளுடன் முடிவடைந்துள்ளது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆனந்தாக் கல்லூரி களத்தடுப்பில் ஈடபடத் தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய யாழ். இந்துக் கல்லூரியின் ஆரம்ப வீரர்கள் ஓட்டம் எதுவும் பெறாது ஆட்டமிழந்த நிலையில் 24.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 87 ஓட்டங்களை மட்டும் பெற்றது.

கஜானந் 30, கிரிசாந் 17 ஓட்டங்களைப் பெற்றனர். உதிரிகளாக 12 ஓட்டங்களும் பெறப்பட்டன. ஆனந்தாக் கல்லூரி சார்பில் பந்து வீசிய சுகந்தராகுலா 03 ஓவர்கள் பந்து வீசி 16 ஓட்டங்களைக் கொடுத்து 03 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். கபிஸ்கா அஞ்சுலா,சுமாசன், டிலிப் ஜெயலத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆனந்தாக் கல்லூரி 34.3 ஓவர்களில் 04 விக்கெட்டுக்களை இழந்து 275 ஓட்டங்களை பெற்ற நிலையில ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது. சுகந்தராகுலா ஆட்டமிழக்காது 8 பெளண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடங்கலாக 84 ஓட்டங்களையும், நிஹால் பிரான்சிஸ்கோ 8 பெளண்டரிகள் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 71 ஓட்டங்களையும் குசல்கெட்டகே 7 பெளண்டரிகள், ஒரு சிக்ஸர் அடங்கலாக 56 ஓட்டங்களையும் பெற்றனர்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சார்பில் பந்து வீசிய சிவலக்சன் 12 ஓவர்கள் பந்து வீசி 71 ஓட்டங்களைக் கொடுத்து 03 விக்கெட்டுக்களையும் மதுசன் 16.3 ஓவர்கள் பந்து வீசி 106 ஓட்டங்களைக் கொடுத்து ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 22.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும இழந்து 106 ஓட்டங்களை மட்டும் பெற்றது. பிரணவன் 12 ஓட்டங்களை பெற்றதுடன் உதிரிகளாக 11 ஓட்டங்களும் பெறப்பட்டன. ஆனந்தாக் கல்லூரி சார்பில் பந்து வீசிய சுமசான் 09 ஓவாகள் பந்து வீசி 36 ஓட்டங்களைக் கொடுத்து 04 விக்கெட்டுக்களையும் சுகந்தராகுலா 03 ஓவாகள் பந்து வீசி 14 ஓட்டங்களைக் கொடுத்து 02 விக்கெட்டுகளையும் டிலிப் ஜெயலத் 2.1 ஓவர்கள் பந்து வீசி ஓர் ஓட்டத்தைக் கொடுத்து 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்கள்.

ஆனந்தாக் கல்லூரியைச் சேர்ந்த சுகந்தராகுலா போட்டியின் ஆட்டநாயகனாகவும், சிறந்த பந்து வீச்சாளராக சுமசானும், சிறந்த பந்து வீச்சாளராகவும் சிறந்த துடுப்பாட வீரனாகவும் நிஹால் பிரான்சிஸ்கோவும் சிறந்த களத்தடுப்பாளராக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த கஜனானும் தெரிவு செய்யப்பட்டார்கள்.

Related Posts