யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு கட்டுப்பாட்டிற்கு தீவிர நடவடிக்கைகள்!!

யாழ்ப்பாண மாவட்டத்தில் தொடரும் மழைக் காலம் காரணமாக டெங்கு நோயின் பரவல் அபாயம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், நோய் பரவலை தடுக்கும் நோக்குடன் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் தலைமையில், மே 22ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு, யாழ் மாவட்ட செயலகத்தில் முக்கிய துறை சார்ந்த கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன், மாவட்ட பிரதேச செயலாளர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பிரதேச சபை நிர்வாகிகள், கடற்படை மற்றும் இராணுவ அதிகாரிகள், மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் உள்ளூராட்சி துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அரசாங்க அதிபரின் முக்கிய உரை:

தலையுரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர்,
தற்போது நோய் பரவல் மிகுந்த அபாய நிலையில் உள்ளதை முன்னிட்டு,
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
கிராம மட்ட உத்தியோகத்தர்களை நேரடியாக உள்ளூர் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

மேலும், சரியான கழிவகற்றல் முறைகள், குப்பைச் சுத்திகரிப்பு, மற்றும் தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்களை அகற்றுவது போன்ற நடைமுறைகளை ஒழுங்கு செய்தல் குறித்து வலியுறுத்தினார்.

எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:
1. பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் டெங்கு பரவலை தடுக்கும் நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்.
2. 2025 ஜீன் மாதம் முதல் ஒவ்வொரு 3வது புதன்கிழமையும் – அனைத்து பிரதேச செயலகங்களில் டெங்கு கட்டுப்பாட்டுக் குழுக் கூட்டங்கள் நடைபெற வேண்டும். கூட்டக்குறிப்புகள் மாவட்ட செயலகத்துக்குத் தரப்பட வேண்டும்.
3. கிராம மட்டக் குழுக் கூட்டங்கள் – ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் இரண்டாவது செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற வேண்டும். அதன் அறிக்கைகள் பிரதேச செயலாளரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
4. ஜீன் 1ஆம் தேதி முதல், மாவட்ட செயலகம் மற்றும் பாடசாலைகளில் கழிவுகளை தரம் பிரித்து அகற்றும் நடைமுறை கட்டாயமாக்கப்படுகிறது.
தரம் பிரிக்கப்படாத கழிவுகள் காணப்பட்டால் அபராதம் விதிக்கப்படும்.
பிற திணைக்களங்கள் ஜூலை 1ஆம் திகதி முதல் இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும்.
5. பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பயன்பாட்டை கட்டுப்படுத்த மத்திய சுற்றாடல் அதிகார சபை, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்வது.
6. கழிவுகளை வீதிகளில் கொட்டுவதை தடுக்கும் நோக்கில், யாழ்ப்பாண மாநகர சபை மற்றும் கோப்பாய் பிரதேச சபை CCTV கண்காணிப்பு கேமராக்களை பொருத்த தீர்மானம்.

தொடர்ந்த ஒத்துழைப்பின் அவசியம்:
கலந்துரையாடலில் கலந்து கொண்ட அனைத்து துறை அதிகாரிகளும், தங்கள் துறைகளைச் சார்ந்த நடவடிக்கைகளை செம்மைப்படுத்தி, ஒத்துழைப்பு அளிக்க உறுதி தெரிவித்தனர். இது மாவட்டத்தினுள் திடீரென ஏற்படக்கூடிய டெங்கு பரவலை தடுக்கும் முக்கியமான அடிக்கல்லாக அமையும் என கருத்து தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்டம் முழுவதும் ஒருங்கிணைந்த செயற்பாடுகள், திட்டமிடல் மற்றும் மக்களுடன் நேரடி தொடர்பின் மூலம், இந்த ஆரோக்கியவிழிப்புணர்வுச் செயற்பாடுகள் வெற்றிகரமாக அமைய District Health Officials நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Related Posts